முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நிலவும் மர்மங்கள் தொடர்பாக பதில் அளிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு ஏற்கனவே நடிகை கவுதமி கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் ஏதும் இல்லாததையடுத்து, மீண்டும் கடிதம் எழுதி மவுனம் கலைக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். 

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார்.

இந்நிலையில் நடிகை கவுதமி ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமர் மோடிக்கு கடந்த டிசம்பர் 9-ந்தேதி கடிதம் ஒன்றை எழுதியதாக டுவிட்டரில் தெரிவித்து கடிதத்தையும் பதிவிட்டு இருந்தார். இது ஊடகங்களிலும் செய்தியாக வந்தன. ஆனால், அந்த கடிதம் எழுதி ஏறக்குறைய 2 மாதங்கள் நிறைவடைய இருக்கும் நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து நடிகை கவுதமிக்கு எந்தவிதமான பதிலும் இல்லை.

இதற்கிடையே தீபக் என்பவர் தகவல் உரிமைச்சட்டத்தில்
தாக்கல் செய்த மனுவில், கவுதமியிடம் இருந்து அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்று பிரதமர் அலுவலகம் பதில் அளித்து இருந்தது.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து மர்மங்களை விலக்க கோரி நடிகை கவுதமி , பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் ஒன்று 2-வது முறையாக எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது-

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகங்களை விளக்க வேண்டும் எனக் கேட்ட கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடிக்கு அவரின் டுவிட்டரில் கடிதம் எழுதினேன். என்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் அந்த கடிதத்தை வெளியிட்டு இருந்தேன். ஜெயலலிதா மரணத்தில் தமிழக மக்கள் அனுபவிக்கும் வேதனைகள், விடை தெரியாத பதில்கள் ஆகியவை குறித்து விளக்கக் கோரி தெரிவித்து இருந்தேன்.

இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது, மக்கள் தொடர்புடையது என்பதால், பொதுப்படையாகவே உங்களிடம் கேட்டு இருந்தேன். மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு, அதில் இருக்கும் உண்மையும், அதற்கு ஏற்றார்போல் மாற்றங்களையும் நீங்கள் நாட்டில் ஏற்படுத்தி வருகிறீர்கள்.

பிரதமர் மோடியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் நாட்டை முன்னெடுத்துச் செல்ல அவர் எடுக்கும் முயற்சிகள் மீது நம்பிக்கை இருக்கிறது. அவரின் வார்த்தைகளில் நம்பிக்கை இருக்கிறது.

தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், மத்திய அரசின் மீது நம்பிக்கையும், கவனமும் இன்னும் குறைந்து போகவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது, பல்வேறு மத்திய அரசு அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் வந்து சென்றனர்.

ஆனால், முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை, எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டது. ஜெயலலிதா உடல் நிலை தொடர்பான விசயத்தில் தமிழக மக்கள் நிலையில்லா தன்மையையும், வேதனையையும் ஏன் வலுக்கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பல மாதங்களாக என் மாநிலம் எப்போதும் கண்டிறாத சூழலை எதிர்கொண்டு, நசுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு பல வழிகளிலும் மக்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளது. வர்தா புயலிலும் பாதிக்கப்பட்டு, மெல்ல மீண்டும் வருகிறோம்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக அமைதியாக போராட்டம் நடத்தினோம். வறட்சியால், விவசாயிகள் பலர் நம்பிக்ைக இழந்து தற்கொலைசெய்து கொண்டுள்ளனர்.

மத்திய அரசிடம் இருந்து நம்பிக்கையான ஆதரவு, பதில் கிடைக்கும் என நானும், மக்களும் எதிர்பார்க்கிறோம். ஆனால், தொடர்ந்து மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. 



நாட்டின் முன்னணி அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் சூழ்ந்த நிலையில், அது குறித்த முழுமையான விவரங்கள் இல்லை. 
மாநிலத்தின், நாட்டின் குடிமக்களுக்கு தனது முதல்வர் இறப்பு குறித்த மர்மங்களை முழுமையாக தெரிந்து கொள்வது உரிமையாகும். ஜனநாயக நாட்டில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்க வேண்டியது அவசியம். எங்களின் அன்புக்கும், மரியாதைக்கும் உரித்தாக இருந்த முதல்வர் ஜெயலலிதா இறப்பில் இருக்கும் மர்மங்களுக்கான கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எங்களின் கவனிக்க அரசு எந்த நடவடிக்கை எடுக்கப்போகிறது?, என்ன பதிலை எங்களுக்கு அளிக்கப்போகிறது?

இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.