gautam gambhir worry and willing about women safety

பலாத்காரம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என தன் மகள் கேட்டுவிடுவாளோ என்று பயமாக இருப்பதாக கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து கௌதம் காம்பீர், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கட்டுரை எழுதியுள்ளார். அதில், பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவது குறித்த செய்திகளை நாளிதழ்களில் பார்க்கும்போது அச்சமாக இருக்கிறது. அதையெல்லாம் பார்த்துவிட்டு என் மகள் என்னிடம் பலாத்காரம் என்றால் என்ன என கேட்டுவிடுவாளோ என்று பயமாக இருக்கிறது. 2 பெண் குழந்தைகளுக்கு தந்தை என்ற முறையில், பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை நினைத்து வேதனைப்படுகிறேன்.

நானும், என் மனைவியும், எனது குழந்தைகளுக்கு எது சரியான தொடுதல், தவறான தொடுதல் குறித்து அறிவுறுத்தவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறோம். இதை நினைக்கும் போது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. 

பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவது உடல்ரீதியான தாக்குதல் மட்டுமல்ல; அந்தக் குழந்தைகள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதைக்கும் செயலாகும். இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக குழந்தைகள் பலாத்காரம் குறித்த சில தரவுகளைப் படித்தேன். அதை படிக்கும்போது, ரத்தம் உறையும் அளவுக்கு எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. தேசிய குற்றஆவணக் காப்பகத்தின்படி, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 336% அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்கள், தீவிரவாதிகளை காட்டிலும் மோசமானவர்கள். 

இணையதளத்தில் கிடைக்கும் பாலியல் வீடியோக்கள் மூலம் தவறான பாதைகளில் செல்வதில் இருந்து இளைஞர்களைக் காக்க வேண்டும், விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். இளைய சமூகத்தினருக்கு எதிர் பாலினமான பெண்களும், சிறுமிகளும் நுகர்வுப்பொருள் இல்லை என்பதை கற்றுக்கொடுத்து அமைதியான ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என கௌதம் காம்பீர் வலியுறுத்தியுள்ளார்.