gautam gambhir supports virat kohli

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 11ம் தேதி இத்தாலியில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று டெல்லியிலும் வரும் 26ம் தேதி மும்பையிலும் நடைபெறுகிறது.

இந்நிலையில், கோலி இத்தாலியில் திருமணம் செய்துகொண்டதை மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவர் விமர்சித்திருந்தார். அவருக்கு இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் காம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் குணா நகர் எம்.எல்.ஏ பன்னாலால் சாக்யா. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விராட் கோலி இந்தியாவில் தான் சம்பாதித்தார். அவருக்கு திருமணம் செய்ய இந்தியாவில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லையா? இந்தியாவில் சம்பாதித்துவிட்டு பில்லியன் கணக்கில் இத்தாலியில் செலவு செய்து திருமணம் செய்திருக்கிறார். அவருக்கு நாட்டின் மீது மரியாதையோ தேச பக்தியோ கிடையாது என விமர்சித்திருந்தார்.

பாஜக எம்.எல்.ஏவின் விமர்சனத்துக்கு கௌதம் காம்பீர் பதிலடி கொடுத்துள்ளார். தனது திருமணம் எங்கு நடக்க வேண்டும் என முடிவெடுப்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பம். அதை விமர்சிப்பது கேலிக்கையாக உள்ளது. சிலர்.. குறிப்பாக அரசியல்வாதிகள், தலைப்பு செய்தியாக வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கருத்துகளை தெரிவித்துவருகின்றனர் என காம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.