டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி இருந்தது. ஆனால் இம்முறை 7 தொகுதிகளையும் கைப்பற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. டெல்லியில் இம்முறை ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நடைபெற உள்ளது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியை சமாளிக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதில், பிரபலங்களை நிறுத்தினால் டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசை சமாளிக்க முடியும் என ஒரு உத்தியை திட்டமிட்டுள்ளது.

 

இதனால் டெல்லி தொகுதியில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை களம் இறக்க பாஜக முயற்சித்து வந்தது. கவுதம் காம்பீர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். அதன் பிறகு அரசியல் மற்றும் பொது விசயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தனது கருத்தை பதிந்து வருகிறார். கடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் அமித்சரசில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட காம்பீர் ஆம் ஆத்மி கட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்தார். 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட காம்பீர் ஆம் ஆத்மியின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கடுமையாக விமர்சித்து வந்திருந்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக நீண்ட காலம் விளையாடினார். பின்னர் கடந்த ஆண்டு டெல்லி மற்றும் ஐதராபாத் இடையே நடந்த ராஞ்சி தொடர் போட்டியோடு அனைத்து தரப்பு கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார்.

 இந்நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்துள்ளார். இதனையடுத்து டெல்லியில் 7 மக்களவை தொகுதியில் ஏதாவது ஒரு தொகுதியில் கம்பீர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக புதிய உத்தேகத்துடன் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.