உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரப்படி 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக 4067 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 109 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி உதவி செய்யுமாறு மத்திய மாநில அரசுகள் கோரிக்கை விடுத்ததையடுத்து பல்வேறு முன்னணி நிறுவனங்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அரசுக்கு நிதி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார். மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு டெல்லி அரசு நிதி தேவை என கூறியிருந்த நிலையில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்குவதாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

தனது நிதியுதவி டெல்லி அரசுக்கு மாஸ்க் போன்ற உபகரணங்கள் வாங்க பயன்படும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக தனது இரண்டு வருட சம்பளமாக 50 லட்சத்தை கௌதம் கம்பீர் வழங்கியிருந்தார். தற்போது மீண்டும் 50 லட்சம் அளித்ததன் மூலம் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அவர் ஒரு கோடி நிவாரண நிதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.