தங்குவதற்கு இடம்கேட்டு வந்த 21 வயது இளம்பெண்ணை, ஓட்டல் ஊழியர்கள் 2 பேர் சேர்ந்து கதற கதற பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் என்ற நகரத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், படித்துமுடித்து வேலைதேடி தலைநகர் போபாலுக்கு வந்துள்ளார். போபாலில் இட்ரிஸ் என்ற ஒரு உறவினர் மட்டுமே இருந்ததால், அவரை தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார். அவரும் புறப்பட்டு வருமாறு கூறியதும், இளம்பெண்ணும் தனியாக தலைநகர் போபாலுக்கு சென்றார். இளம்பெண் வருவதை வீட்டில் சொன்னால், விவரம் தெரியாத மனைவி தேவையில்லாமல் பிரச்சனை செய்யக்கூடும் என நினைத்த இட்ரிஸ், போபால் பேருந்து நிலையம் அருகிலேயே ஒரு அறை எடுத்து, அங்கு அந்த இளம்பெண்ணை தங்கவைக்கலாம் என்று முடிவு செய்தார்.

இந்த தகவலை, பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியிலேயே ஓட்டல் ஒன்றில் வேலைபார்க்கும் தனது இரு நண்பர்களிடமும் கூறியுள்ளார் இட்ரிஸ். அவர்களும், அதற்கென்ன தாராளமாக ஏற்பாடு செய்துவிடலாம்’ என உறுதியளித்தனர். இளம்பெண்ணும் போபால் பேருந்து நிலையத்துக்கு வந்தபின்னர், இட்ரிஸை செல்போனில் அழைத்தார். இதையடுத்து, நண்பர் ஒருவரை பார்க்கப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு வெளியே புறப்பட்ட இட்ரிஸ், பேருந்து நிலையத்துக்கு வந்து இளம்பெண்ணை சந்தித்தார். பின்னர், தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு தமது நண்பர்களிடம் கூறியதையும், எதற்கும் பயப்படத் தேவையில்லை என்றும் அந்த இளம்பெண்ணுக்கு இட்ரிஸ் தைரியமளித்தார்.

பின்னர், நண்பர்கள் வேலைப்பார்க்கும் ஓட்டலுக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்ற இட்ரிஸ், அங்கேயே இளம்பெண்ணுடன்  இரவு உணவை முடித்துள்ளார். பின்னர், நண்பர்களிடம் அவரை ஒப்படைத்துவிட்டு, வீடு திரும்பினார். ஓட்டலில் வேலைபார்த்த அவரது நண்பர்கள் ராகுல் தாக்கூரும், மோனு சர்மாவும் இரவு 11 மணியளவில் வேலையை முடித்துவிட்டு அங்கு காத்திருந்த இளம்பெண்ணை அழைத்துக் கொண்டுச் சென்றனர். இளம்பெண்ணின் ஊர், பெயர் உள்ளிட்ட விவரத்தை கேட்டபடி, நடந்து சென்ற அவர்கள், இருளான ஓரிடம் வந்தவுடன், இளம்பெண்ணை அங்கு தூக்கிச் சென்று மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர்.

ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், பெண்ணின் கதறல் சத்தம் யாருக்கும் கேட்காத நிலையில், அவ்வழியாக காவல்துறையினர் ரோந்து வருவதை கண்ட இருவரும் பெண்ணை அங்கேயே தப்பிச் சென்றனர். காவல்துறையினரை கண்டதும் ஓடிவந்து அவர்களிடம் நடந்த விவரத்தை இளம்பெண் கூறினார். இதையடுத்து, அவர்களை விரட்டிச் சென்ற காவல்துறையினர் ராகுல் தாக்கூரையும், மோனு சர்மாவையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த போலீசார், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர்.