இது என்ன கேலிக்கூத்து! கீதா பிரஸ் பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருதா? காங். கண்டனம்... பாஜக பதிலடி!
கீதா பிரஸ் பதிப்பகத்துக்கு காந்தி பெயரில் விருது வழங்குவது கேலிக்கூத்து என்றும் இது கோட்சேவுக்கும் சாவர்க்கருக்கும் விருது கொடுப்பதைப் போன்றது என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து இயங்கும் கீதா பிரஸ் பதிப்பகத்துக்கு 2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும் எழுத்தாளருமான ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கீதா பிரஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு காந்தி அமைதி விருது வழங்குவதாக அறிவித்திருப்பது "ஒரு கேலிக்கூத்து" எனச் சாடியுள்ளார். மேலும், இது நாதுராம் கோட்சே அல்லது வீர் சாவர்க்கருக்கு விருது கொடுப்பதைப் போன்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
"இந்த ஆண்டு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் கோரக்பூர் கீதா பிரஸ்-க்கு 2021ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு வழங்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு வெளியான அக்ஷயா முகுலின் மிக அருமையான புத்தகத்தில் இந்த அமைப்பின் வரலாறு உள்ளது." என்று கூறியுள்ள ஜெய்ராம் ரமேஷ், அக்ஷயா முகுல் தன் நூலில் மகாத்மாவுடன் கீதா பிரஸ் கொண்டிருந்த முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
RAW உளவு அமைப்பின் புதிய தலைவராக ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்ஹா நியமனம்!
மேலும், மத்திய அரசின் இந்த முடிவு உண்மையில் ஒரு கேலிக்கூத்து என்றும் சாவர்க்கருக்கும் கோட்சேக்கும் விருது வழங்குவது போல இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பிலும் உடனடியாக பதில் வந்துள்ளது.
ஜெய்ராம் ரமேஷுக்கு பதிலடி கொடுத்துள்ள அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இந்தியாவின் நாகரிக மதிப்பை காங்கிரஸ் தாக்குவதாக குற்றம் சாட்டினார். "கர்நாடகாவில் வெற்றி பெற்றதன் மூலம், இந்தியாவின் நாகரிக விழுமியங்கள் மற்றும் செழுமையான மரபுகளுக்கு எதிரான ஒரு போரை, காங்கிரஸ் இப்போது வெளிப்படையாகக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது" என்றும் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியர்களின் நம்பிக்கையையும் பெருமையையும் தக்கவைக்க உதவிய வெளியீடுகளை காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால், அது எந்தப் பக்கம் நிற்கிறது என்று பாஜக தலைவர் மீனாட்சி லேகி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, அனைத்து இந்துக்கள் மீதும் காங்கிரஸ் வெறுப்பு காட்டுவதாக குற்றம் சாட்டுகிறார்.
8 ரயில்களில் 2ஆம் வகுப்பு பெட்டிகளைக் குறைத்து ஏசி பெட்டிகளை சேர்க்கும் தெற்கு ரயில்வே!
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கீதா பிரஸ் பதிப்பகத்தின் நிகரற்ற பங்களிப்பால் இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய சனாதன கலாச்சாரம் தொடர்பான புனித நூல்களை இன்றும் எளிதாகப் படிக்க முடிகிறது சொல்லியிருக்கிறார். 2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசை கீதா பிரஸ் நிறுவனத்துக்கு வழங்குவது அதன் பணிக்கு அளிக்கப்படும் மரியாதை என்றும் அமித் ஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் மத்திய அரசின் முடிவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். "1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட 25,000-க்கும் மேற்பட்ட நபர்களில் பிரசாத் போதார் மற்றும் கீதா பிரஸ் நிறுவனர் ஜெய்தயாள் கோயங்கா ஆகியோரும் அடங்குவர். அத்தகைய பின்புலம் கொண்ட ஒரு நிறுவனத்துக்கு இந்தப் பரிசை அறிவித்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல" என்று ரவிக்குமார் எம்.பி. கூறியுள்ளார்.
காந்தி வெறுப்பாளர்களுக்கு காந்தி பெயரில் பரிசா? - ரவிக்குமார் எம்.பி.கண்டனம்!