மகாத்மா காந்தி ஒன்றும் கடவுள் அல்ல.. அவர் மனிதன் தான்.. எனவே அவரை கடவுளாக போற்றுவதற்குப் பதிலாக அவரது கொள்கைகளை பின்பற்றுங்கள் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

பீகார் மாநிலத்தின் சம்ப்ரான் மாவட்டத்தில் மகாத்மா காந்தி நடத்திய சத்தியாகிரகம் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும். அந்த நிகழ்வின் நூற்றாண்டு விழா தற்போது பீகார் முழுவதும் மாநிலக் கல்வித்துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாட்னாவின் ஞான் பவன் அலுவலகத்தில் உள்ள சாம்ராட் அசோகா மையத்தில், 38 மாவட்டங்களைச் சேர்ந்த 800 மாணவர்களுக்கு மேல் பங்குபெற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 

அந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:

தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையை வலியுறுத்தி அதையே பின்பற்றி வாழ்ந்த காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது மிகவும் முரண்பாடானது. காந்தி கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் அவரது கொள்கைகளும் சித்தாந்தங்களும் உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளன.

காந்தி கடவுள் அல்ல.. அவர் மனிதன் தான்.. எனவே அவரை கடவுளாகக் கருதி அவருக்கு சிலை அமைப்பதைவிட அவரது கொள்கைகளை பின்பற்றுங்கள் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.