சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் அதிவேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. கொரோனாவால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன், ஈரான் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிறப்பான மற்றும் துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால், இந்தியாவில் சமூகப்பரவல் ஏற்படவில்லை. 

இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய 2 மாநிலங்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பில் சதமடித்துவிட்ட நிலையில், கேரளாவும் சதமடிக்கப்போகிறது. தமிழ்நாட்டில் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. 

கொரோனாவிலிருந்து தப்பிக்க, மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் விதமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியிருப்பதோடு, அதன் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றன. 

அனைத்து மாநிலங்களும் கொரோனா சிகிச்சையளிப்பதற்கு, சில மருத்துவமனைகளை பிரத்யேக கொரோனா மருத்துவமனையாக மாற்றிவருவதுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கான படுக்கை வசதிகளையும் ஏற்படுத்திவருகின்றன. 

இந்நிலையில், டெல்லியில் கொரோனா தடுப்பு மற்றும் சிசிச்சை பணிகளை மேற்கொள்ள, தனது எம்பி நிதியிலிருந்து ரூ.50லட்சத்தை அரசுக்கு வழங்குவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு டெல்லி கிழக்கு தொகுதி எம்பி கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கம்பீர் எழுதிய கடிதத்தில், டெல்லி மக்களை கொரோனாவிலிருந்து காக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கொரோனா தொடர்பான சிகிச்சை பணிகளை மேற்கொள்ள எனது எம்பி நிதியிலிருந்து ரூ.50 லட்சம் தருகிறேன். எந்தவிதமான உதவியாக இருந்தாலும் எனது அலுவலகத்தை நாடுமாறு அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் என்று அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கம்பீர் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கும் நிலையில், ஒருசிலர் இன்னும் தனிமைப்படுத்தலின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் உணராமல் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை, தனிமைப்படுத்திக்கொள்கிறீர்களா அல்லது ஜெயிலுக்கு போறீங்களா என்று எச்சரித்திருந்தார் கம்பீர்.