துல்லியமான தகவல் தொடர்பு, ராணுவ சேவை உள்ளிட்டவைகளுக்கு பேருதவியாக இருக்கும் இந்தியாவின் ஜி-சாட் 18 செயற்கைக்கோள், French Guiana-ல் இருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
தகவல் தொடர்பு சேவைக்காக இந்தியா விண்ணில் ஏவியுள்ள 14 செயற்கைக்கோள்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. தகவல் தொடர்பு சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய விஞ்ஞானிகள் தயாரித்துள்ள ஜிசாட்-18 என்னும் செயற்கைக்கோள், Ariane-5 VA-231 Rockrt மூலம் French Guiana-வில் உள்ள செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
3 ஆயிரத்து 404 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளில், 48 தொலைத்தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும் துல்லியமான தகவல் தொடர்பு, ராணுவ சேவை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளுக்கு, இந்த ஜிசாட்-18 செயற்கைக்கோள் மிகவும் உதவியாக இருக்கும் என்றும், 15 ஆண்டுகள் விண்ணில் செயல்பட்டு தகவல் தொடர்பு சேவையாற்றும் என்றும் இந்திய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, வானில் மேகமூட்டங்கள் அதிகமாக காணப்பட்டதால், ஜி-சாட் 18 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
