Asianet News TamilAsianet News Tamil

Army Helicopter crash : உலகின் அதிநவீன ஹெலிகாப்டர் Mi-17V5… விபத்தில் சிக்கியது எப்படி? விசாரணை தீவிரம்!!

உலகின் அதிநவீன வசதிகளை கொண்ட Mi-17V5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

full details of mi 17v5 helicopter
Author
Tamilnadu, First Published Dec 8, 2021, 4:37 PM IST

உலகின் அதிநவீன வசதிகளை கொண்ட Mi-17V5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் அருகே இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலரது உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஹெலிகாப்டரில் பயணித்த இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மீட்கப்பட்டு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்துக்கு சென்றபோது குன்னூர் காட்டேரி பார்க் அருகே விழுந்து நொறுங்கியுள்ளது.

full details of mi 17v5 helicopter

இதனிடையே பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளானதை இந்திய விமானப் படையும் உறுதிசெய்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. விமானம் விழுந்து நொறுங்கிய இடம் வெலிங்டனில் இருந்து சுமார் 3.85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்துக்கு இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர். சவுத்தரி விரைகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் இன்று மாலை அங்கு செல்லவுள்ளார். இந்த நிலையில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் MI-17V5 ரகத்தைச் சேர்ந்தது. ரஷ்ய நிறுவனமான கசன் ஹெலிகாப்டர்ஸிடமிருந்து இந்தியா இதனை வாங்கியது. இது ராணுவ ஆயுதங்கள், வீரர்களை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. உலகில் இருக்கும் அதிநவீன ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. இதனை தீயணைப்புப்பணி, பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி ஆகியவற்றுக்கும் பயன்படுத்த முடியும்.  கடுமையான மழை பெய்யும் பகுதி, கடற்பகுதி, பாலைவனம் ஆகியவற்றிலும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் சிறப்பாக பறக்கும் தன்மை கொண்டவை. கதவுகளை இழுவை மூலம் திறப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பாராசூட் உபகரணங்கள், தேடுதல் விளக்குகள், எப்எல்ஐஆர் சிஸ்டம், எமர்ஜெனிஸ் ப்ளோட்டிங் சிஸ்டம் உள்ளன.

full details of mi 17v5 helicopter

36 ராணுவ வீரர்கள், 4.50 டன் பொருட்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது. இந்த ஹெலிகாப்டரில் ஷட்டர்ன் வி ரக துப்பாக்கிகள், எஸ்-8 ரக ராக்கெட்டுகள், 23எம்எம் எந்திர துப்பாக்கிகள், பிகேடி எந்திர துப்பாக்கி, ஏகேஎம் எந்திரதுப்பாக்கி மூலம் எதிரிகளை சுடமுடியும் தாக்க முடியும். எதிரிகளின் இருப்பிடத்தை ராக்கெட் வீசி அழிப்பது, வாகனங்களை அழிப்பது, குறிவைத்து தாக்குதல், நகரும் இலக்குகளை சரியாகத் தாக்குவது போன்றவற்றை இந்த ஹெலிகாப்டர் மூலம் செய்யலாம்.  இந்த ஹெலிகாப்டரில் ஃபோம் பாலியுரேதேன் எனும் வேதிப்பொருள் எரிபொருள் டேங்கில் நிரப்பப்பட்டிருக்கும். இது ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறும்போது, பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்துவிடும். இது மணிக்கு அதிகபட்சமாக 250 கி.மீ வேகத்திலும், சராசரியாக 580 கி.மீ தொலைவும், அதிகபட்சமாக 1,065 கி.மீ தொலைவையும் எரிபொருள் மூலம் கடக்க முடியும். அதிகபட்சமாக 6 ஆயிரம் மீட்டர் உயரம் வரை பறக்க முடியும். இத்தகைய அதிநவீன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதன் காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios