பெட்ரோல் முதல் சிலிண்டர் மானியம் வரை.. அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அரசு ! என்ன காரணம் ?
Fuel Prices Cut, Subsidy On Gas Cylinders: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எரிபொருள் விலை மீதான மத்திய கலால் வரியை கடுமையாக குறைப்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நவ.3-ம் தேதி மக்களுக்கு தீபாவளி பரிசளிக்கும் விதமாக, பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.5, டீசல் மீதான கலால் வரியை ரூ.10 குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, இந்த வரி குறைப்பை அமல்படுத்திய பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது.
இந்த சூழலில், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையிலும் இது எதிரொலித்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-ஐ கடந்தும், டீசல் ரூ.100-ஐ கடந்தும் விற்பனையாகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இத்துடன், கொரோனா பேரிடரின் போது, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்தும் அவர் பட்டியலிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதில் இருந்து, நமது அரசு ஏழை, நடுத்தர மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்போடு செயலாற்றி வருகிறது.
இதனால், முந்தைய அரசுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆட்சியில் சராசரி பணவீக்கம் குறைந்துள்ளது. பேரிடர் சூழலிலும் மக்களின் நலன் காக்க பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது உலக அளவில் அரசுக்கு பாராட்டை பெற்றுத்தந்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.1.05 லட்சம் கோடி உர மானியத்தோடு, கூடுதலாக ரூ.1.10 லட்சம் கோடி வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வழங்கப்பட்டும் வருகிறது.
ஏழை மற்றும் சாமானிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற பிரதமரின் கூற்றின்படி, மக்களுக்கு உதவும் நடவடிக்கையாக மற்றொரு அறிவிப்பை வெளியிடுகிறோம். அதன்படி, பெட்ரோல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.6-ம் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 வரை குறையும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அனைத்து மாநில அரசுகளும் இந்த வரி குறைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியை குறைத்தபோதும், அதை குறைக்காத பிற மாநில அரசுகள் இந்த வரி குறைப்பை செயல்படுத்தி, சாமானியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இந்த ஆண்டில் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 என 12 சிலிண்டர்களுக்கு பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள் 9 கோடி பேருக்கு மானியம் வழங்க இருக்கிறோம். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,100 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அதிகம் இறக்குமதி செய்யப்படும் இடங்களில் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மீது விதிக்கப்படும் சுங்க வரியையும் குறைத்துள்ளோம்.
இதனால் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை குறையும். இரும்பு, எஃகு மூலப் பொருட்கள் மீதான சுங்க வரி குறைப்பு குறித்தும் அளவீடு செய்து வருகிறோம். இரும்பின் சில மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும். ஏற்றுமதி செய்யப்படும் இரும்பு பொருட்களுக்கு வரி வசூலிக்கப்படும். சிமென்ட் விலையை குறைக்கவும், தாராளமாக கிடைக்கும் அளவுக்கு அதை இருப்பு வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு முடிவானது சாமானியர்களின் பட்ஜெட்டை எளிதாக்கும் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இன்றைய எரிபொருள் விலை குறைப்பு முடிவானது பல்வேறு துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் மக்களின் வாழ்வை மேலும் எளிதாக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.