From The India Gate: காங்கிரசின் பிரார்த்தனையும் ஆம் ஆத்மியின் தலைமைத் தேடலும்
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான 10வது எபிசோட்.
சமாஜ்வாதியின் சங்கடம்
2024 நாடாளுமன்ற தேர்தலை நோக்கி எல்லா கட்சிகளும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் பேச்சு அவரது கட்சிக்குப் பெரும் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், துளசிதாசரின் ராமசரிதமானஸ் நூல் பிற்படுத்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதாகக் கூறினார்.
அவர் வாய் தவறி அவ்வாறு பேசிவிட்டதாக கட்சி நினைக்கவில்லை. கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதற்காக, வேண்டுமென்றே இதைச் செய்தார் என்றுதான் நினைக்கிறார்கள்.
அவர் கட்சியின் மாநிலத் தலைவர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கு ஆதரவாக எந்த முன்னகர்வும் இல்லை. தேர்தலுக்கு முன்பு அவர் ராமசரிதமனாஸ் பற்றி அவதூறாகப் பேசியது, அவர் மீது நடவடிக்கை எடுக்க கட்சியை வற்புறுத்துவதாக உள்ளது என்று உள்கட்சி விவகாரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அவரை கட்சியிலிருந்து நீக்கினாலோ வேறு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாலோ, அவர் ஆதரித்துப் பேசியுள்ள சிறுபான்மையினரின் கவனம் அவர்மீது அதிகமாகிவிடும். அவர்களும் இவருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பது அவரது கணக்கு.
காங்கிரஸின் பிரார்த்தனை
ராஜஸ்தான் பாஜக எம்.பி. ஒருவரை கூடிய சீக்கிரம் மத்திய அமைச்சராக்கி டெல்லிக்கு அனுப்பிவிட்டால் நல்லது என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது.
அவர் எப்படி பெருவாரியான மக்களின் கவனத்தைக் கவருகிறார் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும். அண்மையில் ராஜஸ்தான் மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அவரது ஆதரவாளர்கள் பலரும் அவரது கருத்தை எதிரொலித்தனர். காவல்துறை சூழ்நிலையைச் சமாளிக்க எவ்வளவோ முயற்சி எடுத்தும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார் அந்த எம்.பி.
இவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்டால் ராஜஸ்தான் காங்கிரஸுக்கு இன்னும் நெருக்கடி அதிகமாகவே வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறார்கள் கட்சிக்கு நெருக்கமானவர்கள்.
கார்ப்பரேட் அரசியல்
கேரளாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு நூதனப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இடைக்கால கட்சிப் பொறுப்பாளர்களை நீக்கிய அக்கட்சியின் தேசியத் தலைமை இப்போது புதியவர்களை அப்பதவிகளில் நியமிக்க ஆயத்தமாகியுள்ளது.
கேரள நிர்வாகிகளை ஆம் ஆத்மியின் தேசியத் தலைமை இப்படி நடத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து கேரளா தங்களுக்கு வளமான எதிர்காலம் உள்ள மாநிலம் என்று கருதி வருகிறது. அக்கட்சியின் பொறுப்பாளர்களாக உள்ளவர்கள் மீது அக்கறை இல்லாமல் இருப்பது தேசியத் தலைமையின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா சென்ற டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல ஆகிவிட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயனைப் பாராட்டிய அவர், கேரள அரசாங்கம் நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளது என்று கூறினார்.
கேரளாவில் ஆளும் கட்சியை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சியினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இப்போது அவர்கள் புதிய தலைவருக்காக காத்திருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் ஸ்டைலில் தலைவரைத் தேர்ந்தெடுக்க நேர்காணலில் அலசி ஆராய்ந்து வருகிறார்களாம்.
புறக்கணிப்பும் ஏமாற்றமும்
ராஜஸ்தான் பாஜகவின் விஐபி தலைவர்கள் பலரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வரும் அழைப்புகளை எல்லாவற்றையும் அவர்களால் ஏற்க முடியாதுதான்.
ஆனாலும், அண்மையில் கட்சியின் தேசியத் தலைவர் ஒருவரது மகனின் திருமண விழாவுக்கான அழைப்பில் மாநிலத்தின் முக்கியத் தலைவர்கள் தவிர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் 20 பேரை மட்டும் அழைப்பது என்று தீர்மானித்து, கடைசியில் இரண்டு பேர் மட்டும் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.
இதற்கு என்ன காரணம் என்று யாரும் யாருடனும் விவாதிக்கத் தயாராக இல்லை. ஆனால், ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் ஒருவர்தான் திருமண விழாவில் கலந்துகொள்ள பலருக்கு அழைப்பு வராதபடி பார்த்துக்கொண்டார் என்று சொல்கிறார்கள்.
போஸின் போக்கு
கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. சி. வி. ஆனந்த போஸ் அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு முன் ஆளுநர் பதவியில் இருந்த தங்கர் தங்கலுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று பாஜகவினர் கருதிவந்தனர். ஆனால் போஸ் ஆளுநர் பொறுப்பேற்றவுடன் தனி வழியில் செயல்படத் தொடங்கியுள்ளார். பெங்காலி தனக்குப் பிடித்த மொழி என்று கூறி அம்மொழியைக் கற்கவும் தொடங்கியுள்ளார். ராஜ்பவனில் நடைபெற்ற அவரது பதவியேற்பு நிகழ்வில் முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இந்தப் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தும் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததுடன் விழா குறித்து விமர்சிக்கவும் செய்தார்.
இதனால் பாஜக நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால், அரசுக்கும் ஆளுநருக்கும் சுமூகமான உறவை ஏற்படுத்தவே ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை ஆளுநராக நியமித்ததாக கட்சி தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆளுநர் போஸ் தன் வரம்பை மறந்துவிட்டு செயல்படுகிறார் என்று சிலர் கருதுகிறார்கள். இதன் எதிரொலியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் போஸுடன் ஒரு சந்திப்பை நடத்த அழைப்பு விடுத்துள்ளார் என்று தெரிகிறது. சந்திப்புக்குப் பிறகு போஸின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
ஆந்திராவில் அரசியல் தலைமை மாற்றம்
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ஜனவரி 27ஆம் தேதி 4000 கி.மீ. பாத யாத்திரையைத் தொடங்கியுள்ள நிலையில், அவர் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
அரசியல் வரலாற்றில் பல தலைவர்கள் பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பதவிக்கு வந்திருக்கிறார்கள் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
என்.டி.ஆர். தெலுங்கு தேசம் கட்சியை நிறுவியதும் ஆந்திரப் பிரதேசம் முழுக்க நடைபயணம் சென்றதுதான் அடுத்து நடைபெற்ற தேர்தலில் அவருக்கு வெற்ற தேடித் தந்தது. முன்னாள் முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டியும் பாத யாத்திரை நடத்தியது அவரது தேர்தல் வெற்றிக்கும் முதல்வர் பதவிக்கும் வழிவகுத்தது. தற்போதைய முதல்வர் ஒய். எஸ். ஜெகன் விஷயத்திலும் இதேதான் நடந்தது.
சந்திரபாபு நாயுடுகூட தன்னுடைய பதவியை உறுதிசெய்துகொள்ள பாத யாத்திரை உத்தியைக் கையாண்டார். இப்போது அவரது மகன் லோகேஷும் தனது தந்தையின் தொகுதியான குப்பத்திலிருந்து தன் பாத யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். யுவகளம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை மூலம் கட்சிக்குப் புத்துயிர் பாய்ச்ச அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்தப் பாத யாத்திரைக்கு வெற்றி கிடைத்துவிட்டால், முதல்வர் பதவிக்குக் குறி வைக்கும் எல்லோரும் பாத யாத்திரை வியூகத்தைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.
- Aam Aadmi Party
- Amit Shah
- Andhra Politics
- Andhra Pradesh
- Arvind Kejriwal
- Asianet News tamil
- AsianetNews Tamil
- Bengali language
- C V Ananda Bose
- Cabinet reshuffle
- Chandrababu Naidu
- Delhi chief minister
- Dhankar Dangal
- From The India Gate
- From the India Gate
- Indian Politics
- Kerala model
- Kerala politics
- Kuppam
- Lok Sabha polls
- Mamata Banerjee
- Nara Lokesh
- Pinarayi Vijayan
- Political gossips from India
- Raj Bhavan
- Rajasthan Politics
- Rajasthan paper leak case
- Ramacharitamanas
- Senior NTR
- Suvendu Adhikari
- Tamil Nadu politics
- Telangana
- Telugu Desam Party
- Tulasidas
- UP politics
- Y S Jagan
- Y S Rajasekhar Reddy
- Yuvagalam
- mamata banerjee
- samajwadi party