மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட்  தேர்வு வினாத்தாள், அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக தயாரிக்கப்படும் என  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர்  உறுதி அளித்துள்ளார்.

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வான, நீட், நாடு முழுவதும் சமீபத்தில் நடந்தது; ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், மராத்தி உட்பட, 10 மொழிகளில் தேர்வு நடந்தது.

மருத்துவ கல்லூரி  மாணவர் சேர்க்கைக்காக இந்தாண்டு நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வில் மாநில  மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள்,  ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்  கேட்கப்பட்ட கேள்விகளை விட கடினமாகவும், மாறுபட்டும் இருந்ததாக புகார்கள்  எழுந்தன. குறிப்பாக,  தமிழகத்தில் இந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை  கிளப்பியது.

இந்த குளறுபடி தொடர்பாக நீட் தேர்வை நடத்திய  சிபிஎஸ்இ.யிடம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டது. அதற்கு  பதிலளித்த  சிபிஎஸ்இ, பல மொழிகளில் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டதால்,  பாதுகாப்பு காரணத்துக்காக கேள்விகள் மாற்றி கேட்கப்பட்டன  என தெரிவித்தது.

இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அடுத்த  ஆண்டிலிருந்து  நீட் தேர்வில்  நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என தெரிவித்தார்.

இதுபோன்ற  பிரச்னைகள்  இனி எழாது,  இன்ஜினியரிங்  படிப்புக்கும் நாடு முழுவதும் ஒரே  மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு  வருவதாகவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.