பொக்ரான் அணுகுண்டு சோதனை மற்றும் கார்கில் போர் மூலமாக பாகிஸ்தானை பதறி கதற வைத்தவர் மறைந்த பிரதமர் பாரத ரத்னா வாஜ்பாய்.
1992ம் ஆண்டு நமது அண்டை நாடான சீனா அணுகுண்டு சோதனை நடத்தி உலகையே மிரட்டியது. பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா அணு குண்டு சோதனை நடத்தியது இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்தது.  இதனை அடுத்து இந்தியாவும் தன்னிடம் அணுகுண்டு இருக்கிறது என்பதை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அமெரிக்காவின் தீவிர கண்காணிப்பை மீறி அணுகுண்டு சோதனை நடத்துவது என்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

1995ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்த அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசு முடிவெடுத்தது. ஆனால் பணிகளை துவங்குவதற்கு முன்னரே இந்தியா அணு குண்டு சோதனைக்கு தயாராவதை அமெரிக்காவின் உளவு செயற்கை கோள் புகைப்பட ஆதாரங்களுடன் கண்டுபிடித்தது. இதனை தொடர்ந்து இந்தியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்க முற்பட்டது.

எனவே வேறு வழியின்றி இந்தியாவால் அணுகுண்டு சோதனையை நடத்த முடியாமல் போனது. ஆனால் 1998ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக பதவியேற்ற பிறகு பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்தியே தீருவது என்று முடிவெடுக்கப்பட்டு மிக ரகசியமாக பணிகள் நடைபெற்றன. அமெரிக்காவின் உளவு செயற்கை கோள்கள் கண்களில் மண்ணைத் தூவி அந்த வெடிகுண்டு சோதனையை இந்தியா நடத்தியது.

ஆனால் அதற்காக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மேற்கொண்ட முயற்சிகளும் அமல்படுத்திய திட்டங்களும் உலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. ஏனென்றால் அமெரிக்காவின் உளவு செயற்கை கோளை ஏமாற்றி அணுகுண்டு சோதனை நடத்துவது என்பது அப்போது மட்டும் இல்ல இப்போதும் கூட நினைத்துக்கூட பார்க்க முடியாதது. இதற்காக வாஜ்பாய் பின்பற்றி வழிதான் யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது. அமெரிக்க உளவு செயற்கை கோள் பொக்ரானையே சுற்றி வந்த நிலையில் பாகிஸ்தானுடன் இந்தியா போருக்கு தயாராவது போன்ற ஒரு தோற்றத்தை வாஜ்பாய் ஏற்படுத்தினார். காஷ்மீர் எல்லையில் படைகளை குவித்தார். போர் விமானங்களை பறக்க வைத்தார். இதனால் அதிர்ந்து போன அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டுகோள் விடுத்தார். எனவே இந்தியா உண்மையிலேயே போருக்கு தயாராகிறதா என்பதை அறிய வேண்டிய நெருக்கடி அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.

 இதனால் பொக்ரானை சுற்றி வந்த அமெரிக்க உளவு செயற்கைகோள் காஷ்மீருக்கு மாற்றப்பட்டது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இந்திய விஞ்ஞானிகள் மற்றும் ராணுவத்தினர் பொக்ரானில் கடந்த 1998ம் ஆண்டு மே மாதம் 11 ந் தேதி தொடங்கி 13ந் தேதி வரை ஒரு அணுகுண்டு அல்ல 5 அணுகுண்டுகளை வெடிக்கச் செய்த உலகையே மிரள வைத்தனர். அமெரிக்காவையே ஏமாற்றி பாகிஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய வாஜ்பாய் இந்தியாவை ஒரு அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தி நமது பாதுகாப்பை 1998ம் ஆண்டே உறுதிப்படுத்திவிட்டார். அவரது புகழ் இன்று மட்டும் அல்ல எப்போதும் நிலைத்திருக்கும்.