ஜம்மு-காஷ்மீரில் இருந்து பஞ்சாப் வரை சுமார் 70 கி.மீ ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் ஒன்று பயணித்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் இருந்து பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் வரை சுமார் 70 கி.மீ. தூரத்துக்கு டீசல் இன்ஜினால் இழுத்துச் செல்லப்படும் சரக்கு ரயில் ஒன்று பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹேண்ட் பிரேக் போடாமல் ஓட்டுநர் இன்ஜினில் இருந்து கீழே இறங்கியதாகவும், சரிவு காரணமாக சரக்கு ரயில் நகர ஆரம்பித்து அதன் வேகம் அதிகரிகரித்ததாகவும் தெரியவந்துள்ளது. காலை 7.25 மணி முதல் 9 மணி வரை நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்முவில் இருந்து பஞ்சாப் நோக்கி 53 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. ஜம்முவில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் ஓட்டுனர் மாற்றத்திற்காக ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது, ஜம்மு-ஜலந்தர் மார்க்கமாக சரிவான பாதையில் எதிர்பாரா விதமாக ரயிலானது செல்லத் தொடங்கியது. பஞ்சாப் மாநிலத்தை நோக்கி சரக்கு ரயில் ஓடத் தொடங்கிய சமயத்தில் ரயிலில் ஓட்டுநரோ, உதவி ஓட்டுநரோ யாரும் இல்லை.

Scroll to load tweet…

இதையடுத்து, ஜம்மு-ஜலந்தர் வழித்தடத்தில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உஷார்படுத்தப்பட்டனர். ஓடும் ரயிலைப் பற்றிய தகவல் கிடைத்ததும் ஜலந்தர்-பதான்கோட் பிரிவில் உள்ள அனைத்து ரயில்-சாலை கிராசிங்குகளும் பாதுகாப்பாக மூடப்பட்டதாக ரயில்வே போலீஸ் (ஜலந்தர்) சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் இல்லாமல் ஓடிய அந்த சரக்கு ரயில், சுமார் 70 கி.மீ. பயணித்து கடைசியாக செங்குத்தான சாய்வு காரணமாக பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்புரி மாவட்டம் உஞ்சி பஸ்ஸி கிராமம் அருகே நின்றது. மணல் மூட்டைகள் மூலம் ரயில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீருக்கடியில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகா நகரம்: ஆழ்கடலில் பிரதமர் மோடி வழிபாடு!

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், சரக்கு ரயிலின் ஓட்டுநர் ஹேண்ட் பிரேக் போடாமல் ரயிலை விட்டு இறங்கிச் சென்றதால், சரிவான பாதையில் ஓடியதாக தெரியவந்துள்ளது.