ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி, இலவச இணையதள சலுகை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ 4ஜி சிம் கார்டை கடந்த மாதம் 5 ஆம் தேதி விநியோகம் செய்தது. அறிமுக சலுகையாக டிசம்பர் 3 ஆம் தேதி வரை இணையதளம், தொலைபேசி அழைப்புகள் அனைத்தையும் இலவசமாக அறிவித்திருந்தது. 

வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கோடு துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகள், தமிழகத்தில் இதுவரை 11 லட்சம் பேர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 100 மில்லியன் பயனாளர்களை அடைவதற்காக இந்த சலுகையினை மார்ச் 2017 வரை நீட்டிக்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் ட்ராய் விதிகளின்படி, எந்த தொலை தொடர்பு நிறுவனமும் தாங்கள் வழங்கும் சலுகையை 90 நாட்களுக்கு நீட்டிக்கக் கூடாது. எனவே, ஜியோ வெல்கம் ஆபர் என பெயரை மாற்றி இந்த சலுகைகள் வழங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.