மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த பூத் நிலை அதிகாரி (BLO) சாகீர் ஹூசைன் மாரடைப்பால் உயிரிழந்தார். பணிச்சுமையே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்ட, இது தேர்தல் பணியில் 4வது மரணம் ஆகும்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) ஈடுபட்டிருந்த பூத் நிலை அதிகாரி (BLO) ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பணிச்சுமை காரணமாகவே அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நவம்பர் 4-ஆம் தேதி SIR பணிகள் தொடங்கியதில் இருந்து மேற்கு வங்கத்தில் பதிவாகும் நான்காவது மரணம் இதுவாகும்.
திடீர் நெஞ்சுவலி
உயிரிழந்த பி.எல்.ஓ. சாகீர் ஹூசைன் (Zakir Hossain) அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் சாகீர் ஹூசைனுக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அன்று இரவு அவர் உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மற்றும் வழக்கமான கற்பித்தல் பணி ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டியிருந்ததால், சாகீர் ஹூசைன் கடுமையான அழுத்தத்தில் இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். விடுப்பு கேட்டும் பள்ளி நிர்வாகம் அவரை விடுவிக்க மறுத்துவிட்டதால், இரண்டு பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் நிர்வகிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
நான்காவது மரணம்
சாகீர் ஹூசைனின் மரணத்துடன், SIR பணி தொடர்பான மன அழுத்தத்தால் உயிரிழந்த பூத் நிலை அதிகாரிகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர், பூர்வ பர்தமான் மாவட்டத்தில் ஒரு BLO மாரடைப்பால் இறந்தார்.
நாடியாவில் ஒரு BLO-வும், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மால்பஜாரில் மற்றொரு BLO-வும் பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மரணங்கள் மேற்கு வங்கத்தில் கடுமையான அரசியல் மோதலைத் தூண்டியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸின் குற்றச்சாட்டு
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும், முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், BLO-க்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் பணிச்சுமை ஏற்றப்படுவதாக தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வாரம் போங்காவ்னில் நடந்த பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்ட குறைந்தது 10 BLO-க்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் கூறினார்.
மறுபுறம், பாரதிய ஜனதா கட்சி இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. BLO-க்கள் உணரும் மன அழுத்தத்திற்கு தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் காரணமல்ல என்றும், மாநில அரசு கொடுக்கும் நிர்வாக மற்றும் அரசியல் அழுத்தங்களே உண்மையான காரணம் என்றும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது.


