பூனேயில் நான்கு வயது குழந்தை 3வது மாடியில் ஜன்னல் கம்பியில் சிக்கித் தொங்கிய நிலையில், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையின் தாய் மூத்த மகளை பள்ளியில் விட சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
மகாராஷ்டிர மாநிலம் பூனே நகரில் நான்கு வயது குழந்தை ஒருவர் மூன்றாவது மாடியில் உள்ள ஜன்னல் கம்பியில் சிக்கித் தொங்கிய நிலையில், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜார் நிம்பால்கர்வாடி பகுதியில் உள்ள சோனாவானே கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 9 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் தாய் தனது மூத்த மகளைப் பள்ளியில் விடுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
வீட்டிற்குள் தனியாக இருந்த நான்கு வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது, ஜன்னல் அருகில் சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக ஜன்னல் கம்பியில் குழந்தையின் தலை சிக்கிக்கொண்டு, மூன்றாவது மாடியில் இருந்து வெளியே தொங்கியது.
இதே கட்டிடத்தில் வசிக்கும் ஒரு தீயணைப்பு வீரர், குழந்தை தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக மூன்றாவது மாடிக்குச் சென்றுள்ளார். வீட்டின் கதவு வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்ததால், அவர் கீழே சென்று குழந்தையின் தாய்க்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் இருவரும் மாடிக்கு வந்து, சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர். அண்டை வீட்டார் உதவியால் சிறுமி காப்பாற்றப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியில் நடந்த இதே போன்ற சம்பவம்
கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த ஒரு குழந்தை மீட்பு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது நினைவிருக்கலாம். ஆவடி நகரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இந்த சம்பவத்தில், 8 மாத குழந்தை ஒன்று தனது தாயின் கையிலிருந்து தவறி நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்தது. அந்தக் குழந்தை இரண்டாவது மாடியில் இருந்த சன்ஷேட் மீது விழுந்து, அதன் ஓரத்தில் சிறிது நேரம் தொங்கிக் கொண்டிருந்தது.
கீழே விழுந்தால் குழந்தையைப் பிடிக்க தரையில் ஒரு விரிப்பை விரித்துப் பிடித்துக்கொண்டு அண்டை வீட்டார் காத்திருந்தனர். பின்னர் மூன்று இளைஞர்கள் முதல் மாடி ஜன்னலுக்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஜன்னல் கம்பியில் ஏறி அந்த குழந்தையை பத்திரமாக மீட்டார். இந்த சம்பவங்களும் குழந்தைகளை தனியாக விடும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளன.
