ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், அதிலிருந்து மீண்டு இந்தியாவை தன்னிறைவு பொருளாதார நாடாக கட்டமைக்கும் விதமாக பிரதமர் மோடி சுயசார்பு பாரதம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 

அதன்படி, உள்நாட்டு உற்பத்திக்கும் உள்நாட்டு வணிகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, இந்தியாவை சுயசார்பு பொருளாதார நாடாக உருவாக்கும் விதமாக,அந்த திட்டத்திற்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்குவதாக, பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடிக்கான அறிவிப்புகளை 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், மின்னுற்பத்தி நிறுவனங்கள், விவசாயம், புலம்பெயர் தொழிலாளர்கள், பழங்குடி மக்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், அணுசக்தித்துறை, ரியல் எஸ்டேட், சிறு, குறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள், விவசாயம் சார்ந்த பால்வளத்துறை மற்றும் மீன்வளத்துறை என அனைத்து தரப்பையும் உள்ளடக்கும் விதத்தில், மொத்தம் ரூ.20,97,053 கோடிக்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். 

மத்திய அரசின் இந்த அறிவிப்புகள் போதாது ஒரு தரப்பு விமர்சித்தாலும், தொழில்துறையினர் இந்த அறிவிப்புகளை வரவேற்கவே செய்தனர்.

இந்நிலையில், சுயசார்பு இந்தியா திட்ட அறிவிப்புகள் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரகுராம் ராஜன், கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சூழலாலும் ஊரடங்காலும் மட்டும் இந்திய பொருளாதாரம் சரிவடையவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே இந்திய பொருளாதாரத்தை மீட்க தொழில்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான அறிவிப்புகள் உள்ளிட்ட சில சலுகைகள் சிறந்தவை தான் என்றாலும் இவை போதாது. 

பெரிய நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் பிரச்சனைகளை தீர்க்க ஊக்கத்தொகை அறிவிக்க வேண்டும். இந்திய பொருளாதாரத்துடன் சேர்த்து மக்களையும் காக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச கோதுமை, பருப்பு வழங்கினால் மட்டும் போதுமா..? பால், காய்கறிகள் வாங்க அவர்கள் காசுக்கு எங்கே போவார்கள்? வீட்டு வாடகைக்கான காசுக்கு என்ன செய்வார்கள்? அரசு மாத மாதம் வழங்கும் ரூ.500 மற்றும் இலவச உணவு பொருட்கள் மட்டும் போதாது. கூடுதல் தொகையை வழங்க வேண்டும். அப்போதுதான் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். மக்களிடம் பணமில்லாமல் பொருளாதாரத்தை மீட்க முடியாது.

இந்திய பொருளாதாரத்தை பிரதமராலோ அல்லது மத்திய அரசால் மட்டுமோ மீட்டெடுக்க முடியாது. இந்தியாவில் சிறந்த பொருளாதார நிபுணர்கள் பலர் உள்ளனர். எனவே அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுடன் மத்திய அரசு ஆலோசித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.