இந்தியாவுக்கே பேரிழப்பு: டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

Dr. Manmohan Singh Condolences: டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்பட பல தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Former Prime Minister Dr Manmohan Singh Dies: Leaders Condolences sgb

முன்னாள் இந்தியப் பிரதமரும் பொருளாதார மேதையுமான டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். வெள்ளிக்கிழமை அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்பட பல தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி: பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியா மிகுந்த மதிப்புக்குரிய தலைவர்களுள் ஒருவரை இழந்துவிட்டது. எளிமையான பின்புலத்திலிருந்து வந்தவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள். புகழ்பெற்ற பொருளாதார நிபுணராகத் திகழ்ந்தவர். நிதியமைச்சர் உள்பட பல உயர் பதவிகளை வகித்தவர். அவர் பொருளாதாரக் கொள்கைகளில் ஆழமாகத் தடம் பதித்தவர். சாமானியர்களின் வாழ்க்கை மேம்பட பல முயற்சிகளை எடுத்தார்" என்று கூறியுள்ளார்.

அமித் ஷா: "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுச் செய்தி மிகுந்த கவலையைத் தருகிறது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து, நிதியமைச்சராகவும் பிரதமராகவும் நாட்டின் நிர்வாகத்தில் முக்கியப் பங்களிப்புகளைச் செய்துள்ளார்" என உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

மல்லிகார்ஜுன் கார்கே: "சந்தேகத்திற்கிடமின்றி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை அன்புக்கு உரியதலைவராக வரலாறு நினைவுகூரும்" என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு தலைவரை இந்தியா இழந்துவிட்டது என்றும் ஈடு இணையற்ற ஒரு பொருளாதாரா மேதை எனவும் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி: நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில், ‘மன்மோகன் சிங் அவர்கள் தன்னுடைய ஆழ்ந்த அறிவாற்றல் மற்றும் ஒற்றுமையுணர்வைக் கொண்டு இந்தியாவை வழிநடத்தினார். அவரது எளிமையும் பொருளாதாரத்தில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த புரிதலும் நாட்டுக்கே உத்வேகம் கொடுத்தது" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரியங்கா காந்தி: காங்கிரஸ் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி, "அவரது நேர்மை எப்போதும் நம் எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கும். இந்த நாட்டை உண்மையாக நேசிக்கும் உயர்ந்த மனிதராக இருந்தார். அவரது எதிர்ப்பாளர்கள் அவர்மீது தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நாட்டுக்கு சேவை செய்வதில் தொடர் கவனம் செலுத்தியவர்" என்று தெரிவித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ்: "மிகவும் முழுமையான, அசாதாரணமான, சிறப்புமிக்க வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. தலைமைப் பொருளாதார ஆலோசகர், நிதிச் செயலர், ரிசர்வ் வங்கி ஆளுநர், திட்டக் குழுவின் துணைத் தலைவர், நிதி அமைச்சர், இந்தியப் பிரதமர் என பல பதவிகளை வகித்தவர். ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவர். 1956ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் ஆடம் ஸ்மித் பரிசு பெற்றார். மென்மையாகப் பேசுபவர், நிதானமானவர், எப்போதும் கண்ணியமானவர். 1991, 1992ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்த பட்ஜெட்டுகளின் மூலம் இந்தியப் பொருளாதாரத்த்தை மாற்றி அமைத்தார். அவரது ஆட்சியில் நிறைவேறிய இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை உயர்த்தியது" என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

முதல்வர் மு. க. ஸ்டாலின்: "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவால் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன். அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார மாற்றத்தை வழிநடத்திச் சென்றது. அன்னாரது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையில் நிலையான வளர்ச்சி, சமூக மேம்பாடு, சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன" என தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி: "இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் (1982-1985), மத்திய நிதி அமைச்சர் (1991-1996) பதவிகளில் இருந்தபோது, அவரது நிதிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்தன. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்ளைகள் நாட்டின் வளர்ச்சிக்குப் புதிய பாதையை உருவாக்கின. அவர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர், திறமையான நிர்வாகி, முன்மாதிரியான அரசியல்வாதி. அவரது பங்களிப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்" என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பானி பழனிச்சாமி கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி: "நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. நான் அவருடன் பணியாற்றியுள்ளேன். மத்திய அமைச்சரவையில் அவரை மிகவும் நெருக்கமாகப் பார்த்துள்ளேன். அவரது புலமை மற்றும் ஞானம் சந்தேகத்திற்கு இடமில்லாதது. நாட்டில் அவர் கொண்டு வந்த நிதி சீர்திருத்தங்கள் பரவலான ஏற்பைப் பெற்றவை" என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios