இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 39 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. 

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிராவில் தான் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 3,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை மகாராஷ்டிராவில் 50,231ஆக அதிகரித்துள்ளது.

சாமானியர்கள் முதல் உலக தலைவர்கள் வரை பாரபட்சமின்றி தாக்கும் கொரோனா, இந்தியாவிலும் ஆட்சியாளர்களை தொற்றியுள்ளது. மகாராஷ்டிராவின் வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர ஆவாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். 

இந்நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான அசோக் சவானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தனது சொந்த தொகுதியான மராத்வாடாவுக்கு, கொரோனா தடுப்பு பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அடிக்கடி சென்றுவந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் சவான், மகாராஷ்டிராவின் முதல்வராக 2008 - 2010 காலக்கட்டத்தில் இருந்துள்ளார். தற்போதைய மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார் அசோக் சவான்.