துபாயிலிருந்து வந்து தனிமைப்படாமல் மீட்டிங்கில் கலந்துகொண்ட முன்னாள் எம்எல்ஏ-வின் மகள்!பீதியில் சீனியர் தலைகள்
வெளிநாட்டிலிருந்து வந்ததால் தனிமைப்படுமாறூ அறிவுறுத்தப்பட்டிருந்த கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வின் மகள் மீட்டிங்கில் கலந்துகொண்டது கடும் சர்ச்சையையும் பீதியையும் எழுப்பியுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. கொரோனாவை தடுப்பதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், இந்த கொடூரமான வைரஸ் மென்மேலும் பரவாத வகையில் தற்காத்துக்கொள்வதே கொரோனாவிலிருந்து விடுபடுவதற்கான வழி.
அதனால், மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளதோடு, 144 தடை, லாக்டவுன் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கிவிட்டது. எனவே மக்கள் தனிமைப்படுத்தி கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்திவருகின்றன.
சாமானிய மக்களிடம் கூட அரசு தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவரும் நிலையில், பதவியிலும் பொறுப்பிலும் இருப்பவர்கள் அலட்சியமாக நடந்துகொள்வது அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூரின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக எம்பி துஷ்யந்த் சிங், தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல் அதன்பின்னர் குடியரசுத்தலைவர் கொடுத்த விருந்து மற்றும் திமுக எம்பி கனிமொழி கொடுத்த விருந்து ஆகியவற்றில் கலந்துகொண்டதால், அந்த விருந்துகளில் கலந்துகொண்ட மற்ற எம்பிக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். அந்த சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், கர்நாடகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான எம்.எல்.உஸ்தத்தின் மகள் ருக்சனா உஸ்தத் கடந்த 10 தினங்களுக்கு முன் துபாயிலிருந்து வந்துள்ளார். அதனால் அவர் அடுத்த 15 நாட்களுக்கு தனிமைப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டவர் என்பதை உணர்த்தும் விதமாக அவருக்கு ஸ்டாம்ப்பும் கையில் குத்தப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கிடையே, அவர் கடந்த 3 நாட்களுக்கு முன் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமாரும் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் ருக்சனா உஸ்தத்தும் கலந்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது பீதியை வெளிப்படுத்தியுள்ளார். தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ள அந்த அரசியல் தலைவர், எனக்கு 65 வயது ஆகிறது. எனது ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோய் இருக்கிறது. இப்படியிருக்கையில், அவர் எப்படி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளலாம்? இது அனைவருக்குமே ரிஸ்க் அல்லவா என்று பயத்தை ஆதங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் அந்த கூட்டத்தில், தான் கலந்துகொண்டது, வெளிநாட்டிலிருந்து வந்து 10 நாட்கள் ஆனபிறகு தான் என்றும், தான் தனிமையில் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட காலக்கெடுவின் கடைசி நாள் தான் அது என்றும் ருக்சனா உஸ்தத் தன் தரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.