கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நிலை எப்படி உள்ளது: அப்பல்லோ தகவல்!
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது
கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி, உடல்நிலை கோளாறு காரணமாக பெங்களூரு ஜெயாநகர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டு அந்த வதந்திகளுக்கு அப்பல்லோ மருத்துவமனை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு ஜெயாநகர் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, அதிகாலை 3:40 மணியளவில் உடல் நலக்குறைவு மற்றும் அசௌகரியத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் பி.சதீஷ்சந்திரா மற்றும் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு அவரது உடல் நன்கு ஒத்துழைப்பு தருகிறது. அவரது இரத்த இயக்கவியல் சீராக உள்ளது. குமாரசாமியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரக்ஷா பந்தன் நாளில் சிறுநீரகத்தை பரிசாக வழங்கிய பெண்! தம்பியின் உயிரைக் காப்பாற்றிய அன்புச் சகோதரி!
காய்ச்சல் மற்றும் சோர்வு உள்ளிட்ட உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டதால் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. குமாரசாமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை படிப்படியாக தேறி வருவதாகவும், அடுத்த 48 மணிநேரம் அவரது உடல்நிலை தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும் எனவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டவுடன், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
குமாரசாமி, சமீபத்தில் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பிறகு, கட்சி பணிகள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இருப்பினும், உடல்நிலை மோசமடைந்ததால், இன்று அதிகாலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் குழு குமாரசாமிக்கு சிகிச்சை அளித்து வருகிறது. மருத்துவமனையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களின் வருகை தடைசெய்யப்பட்டுள்ளது,