ஸ்ரீநகர் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோதே சிறப்பு அழைப்பாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறையின் முன்னாள் செயலாளர் டாக்டர் ரீட்டா 
ஜிதேந்திரா. இவர், நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீநகர் தூர்தர்ஷன் கேந்திராவுக்கு சென்றார். 

பிறகு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்தும் கொண்டார். நிகழ்ச்சியில் நன்றாக பேசிக் கொண்டிருந்த ரீட்டா, திடீரென்று இருக்கையின் பின்னால் சாய்ந்து மேலே பார்த்தபடி மூச்சுவிட திணறியவர் மூச்சுபேச்சில்லாமல் ஆகிவிட்டார். இதனைப் பார்த்த டிவி ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர். 

உடனடியாக ரீட்டாவை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரீட்டா  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டிருந்தபோதே அழைப்பாளர் உயிரிழந்த சம்பவம் தூர்தர்ஷன் ஊழியர்களை பெரிதும் அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது ரீட்டா உயிரிழந்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.