Covid19: பாதுகாப்பாக இருந்தும் என்னை கொரோனா தாக்கிடுச்சு.. தொண்டர்களுக்கு அட்வைஸ் கொடுத்த சந்திரபாபு நாயுடு.!
தனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில், விஐபி, சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,38,018க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தலைநகர் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சகட்ட நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளன. முக்கிய அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்களை கொரோனா தாக்கி வருகிறது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திர பாபுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
அண்மையில் என்னை நேரடியாக தொடர்பு கொண்டவர்கள், உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தயவுகூர்ந்து பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.