மேற்குவங்க இளைஞர்களின் வாய்ப்புகளை பறிக்கும் ஊடுருவல்காரர்கள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
மேற்குவங்க இளைஞர்களின் வாய்ப்புகளை ஊடுருவல்காரர்கள் பறிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில், மேற்குவங்க மாநிலத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேற்கு வங்க மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேற்குவங்க இளைஞர்களின் வாய்ப்புகளை ஊடுருவல்காரர்கள் பறிப்பதாக குற்றம் சாட்டினார். தேர்தல் பிரசாரத்தின் போது, முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டு வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
சமாதான அரசியலுக்காக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அரசியல் சாசனத்தை தாக்குவதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, “ஓபிசியினரின் உரிமைகளை பறித்து, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.” என்றார். ஜூன் 1ஆம் தேதி உங்கள் வாக்கு மூலம் வளர்ச்சியடைந்த மேற்குவங்கம் என்ற புதிய பயணத்தை தொடங்குவோம் என கூறி பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.
மேற்குவங்க இளைஞர்களின் வாய்ப்புகளை ஊடுருவல்காரர்கள் பறிப்பதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, “மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் மக்கள்தொகை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தேசமும் கவலையடைந்துள்ளது. சிஏஏவுக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்தினார்கள்? ஏனென்றால் ஊடுருவல்காரர்களை இங்கேயே குடியேற்ற அவர்கள் விரும்புகிறார்கள்.” என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் நீட்டிப்பு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
2024 மக்களவைத் தேர்தலுக்காக மேற்கு வங்கத்தில் இது தனது கடைசி தேர்தல் பிரசாரம் என்ற குறிப்பிட்ட பிரதமர் மோடி, “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான கடந்த 10 ஆண்டுகால வளர்ச்சிப் பயணத்தையும், 60 ஆண்டுகால அவலத்தையும் பொதுமக்கள் பார்த்துள்ளனர். எனவே, இந்தத் தேர்தல் வித்தியாசமானது.” என்றார்.
பிரதமர் மோடி வருகிற 30ஆம் தேதி (நாளை) கன்னியாகுமரி வரவுள்ளார். டெல்லியில் இருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். பின்னர், படகு மூலம் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி, மே 30ஆம் தேதி மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தங்கியிருந்து அங்குள்ள தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.