Following Sasikala Telki was given a privilege

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, போலி முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கிக்கும் பல்வேறு சலுகைகள் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் டிஐஜி ரூபா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிஐஜி ரூபா வெளியிட்ட அறிக்கையில், மேலும் பல கைதிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது குறித்து விளக்கமாக அதில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், போலி முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கிக்கும், சிறையில் சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்கப்பட்ட விவகாரம் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.

தெல்கிக்கு, மசாஜ் செய்ய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக, ஐபிஎஸ் அதிகாரி ரூபாய், சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விரும்பியே ஆதாரங்களைத் திரட்டினேன்.

சிறையில், வழங்கப்பட்ட சலுகைகள் சிறைவிதிகளுக்கு முரணானது. சிறப்பு சலுகைகள் அனுபவித்தது பற்றி அவருக்கான தண்டனையை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தால், சசிகலாவின் செயலை மிக கடுமையானதாகக் கருதி உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவிக்க வாய்ப்புள்ளது.

சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதுபோல், தெல்கி உள்பட குறிப்பிட்ட சில தண்டனைக் கைதிகளுக்கும் விதி மீறி அளிக்கப்பட்டது உண்மை. என் போராட்டத்துக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும். இது தொடர்பாக நான் அளித்த அறிக்கையில் உறுதியுடன் இருக்கிறேன். இந்த விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டேன். இவ்வாறு ஐபிஎஸ் அதிகாரி ரூபா தெரிவித்தார்.