கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவரது 112 நாள் பரோல் முடிந்து இன்று ராஞ்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

கடந்த 1990-ம் ஆண்டு பீகார் மாநிலத்தின் முதல்வராக இருந்த போது கால்நடை தீவன கொள்முதலுக்காக, மாவட்ட கருவூலங்களில் முறைகேடு நடைபெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த வழக்குகளை ஜார்க்கண்ட் மாநில சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. லாலு மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து 4 வழக்குகளில் அவருக்கு 14 ஆண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டது. பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீனில் விடுவித்து ராஞ்சி உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் 11-ம் தேதி உத்தரவிட்டது. அதன்பின்னர் மருத்துவ காரணங்களுக்காக அவரது ஜாமீன் மேலும் நீட்டிக்கப்பட்டது.

 

மேலும் ஒருமுறை நீட்டிப்பு செய்வதற்காக லாலுவின் வழக்கறிஞர் கடந்த 24-ம் தேதி தாக்கல் செய்த மனுவை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். பிறகு 
30-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என ஆணை பிறப்பித்தார். இதையடுத்து இன்று நீதிமன்றத்தில் லாலுபிரசாத் யாதவ் சரணடைந்தார். பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.