பெட்ரோல், டீசல் மீது மக்களை பாதிக்காத வகையில் புதிய வரி..! பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி விதிப்பதாக பட்ஜெட்டில் அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த வரிவிதிப்பு வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில் அரசு பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு இந்த மாதம் புதிய உச்சத்தை எட்டியது. டெல்லியில் ரூ.86ஐ அண்மையில் எட்டிய பெட்ரோல் விலை, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் ரூ.93க்கு விற்கப்படுகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ88.82 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.71 ஆகவும் உள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் குரல் வலுத்துவருகிறது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிவிதிப்பில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றன.
ஏற்கனவே இருக்கும் வரியை குறைக்க வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது வேளாண் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் விதிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.5 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4ம் விதிக்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் மீது மட்டுமல்லாது இன்னும் சில பொருட்களின் மீது வேளாண் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் விதிப்பதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் இந்த வரியால் வாடிக்கையாளர்கள் பாதிக்காத வண்ணம் அரசு பார்த்துக்கொள்ளும் என்றார்.
பெட்ரோல், டீசல் மீதான வேளாண் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரி விதிப்பால், அடிப்படை கலால் வரி மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரி விகிதங்கள் குறையும். அதனால் வாடிக்கையாளர்கள் மீதான சுமை அதிகரிக்காது என்று தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.