கர்நாடக அணைகளிலிருந்து அதிகமான நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்படுவதால், தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கேரளா முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. 

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கபினி மற்றும் கேஆர்எஸ் ஆகிய கர்நாடக அணைகளிலிருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. அதனால் மேட்டூர் அணை நிறைந்து மேட்டூர் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே திறந்துவிடப்பட்டு வருகிறது. அதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தொடர் கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து அதிகப்படியான உபரிநீர் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அடுத்த 2 நாட்களுக்குள் நொடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

அதோடு அமாரவதி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால், கரூர் மாவட்டம் திருமுக்கூடல் பகுதி காவிரியாற்றில், 2 லட்சத்து 80 ஆயிரம் கன அடி வரையில் தண்ணீர் வரத்து உயரக்கூடும். எனவே கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல்,கரூர், திருச்சி, தஞ்சை,நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.