ஹைதராபாத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட மின்சார விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹைதராபாத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த மின்சார விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். தேர் இழுக்கும் போது மின்கம்பியில் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டது. ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹைதராபாத் ராமந்தபுரத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ராமந்தபுரத்தில் உள்ள கோகுல் நகரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கிருஷ்ணர் சிலை அமர வைக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. தேரை இழுத்துச் சென்ற வாகனம் பழுதடைந்ததால், இளைஞர்கள் தேரை கைகளால் இழுத்துச் சென்றனர். அப்போது தேர் எதிர்பாராத விதமாக மின்கம்பியில் உரசியது. இதனால் ஒன்பது பேருக்கு மின்சாரம் தாக்கியது.
இதில் கிருஷ்ணா யாதவ் (21) சுரேஷ் யாதவ் (34), ஸ்ரீகாந்த் ரெட்டி (35), ருத்ரா விகாஸ் (39), ராஜேந்திர ரெட்டி(15) உள்ளிட்ட 5 பேர் துடிதுடித்து உயிழந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 4 பேருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் உயிரிழந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர் விழாவின் போது மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
