உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரப்படி 6 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக 5,734 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 166 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தற்போது இந்தியாவில் முதல் முறையாக மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி இருக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருந்து வந்தார். உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் மரணடமடைந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் 215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 540 பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கும் நிலையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு 1135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருகின்றனர்.