உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரப்படி 7,747 பேருக்கு கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 239 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் தற்போது முதல் கொரோனா பலி நிகழ்ந்துள்ளது. புதுவையில் இருக்கும் மாஹே பகுதியில் 71 வயது முதியவர் ஒருவர் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமை சிகிச்சையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த அவர் இன்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் இதுவரை 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

தமிழகத்திலும் கொரோனா தொற்று அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 911ஐ எட்டியுள்ளது. 9 பேர் பலியாகி இருக்கும் நிலையில் 44 பேர் பூரண நலம் பெற்றுள்ளனர்.