மத்திய பிரதேசம் மாநிலம் விடிஷாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் சர்மா அளித்த புகாரின் அடிப்படையில், டுவிட்டர் இந்தியாவின் எம்டி மனீஷ் மகேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து மத பண்பாடு மற்றும் நாகரிகம் குறித்த தகவல்களை வழங்கும் தனது டுவிட்டர் கணக்கு தனக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமல் மூடப்பட்டதாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் சர்மா குற்றம்சாட்டியதுடன், இதுகுறித்து டுவிட்டர் இந்தியாவின் எம்.டி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விடிஷாவில் வசிக்கும் ஸ்ரீகாந்த் சர்மா, இந்தியாவின் இந்து நாகரிகம் குறித்து ட்ரூயிண்டாலஜி (#TrueIndology) என்ற ட்விட்டர் கணக்கை நடத்திவந்துள்ளார். அதில், இந்தியாவின் புராணங்கள், வரலாறு மற்றும் இந்து மத மரபுகள் பற்றிய தகவல்களை அவர் பகிர்ந்துவந்துள்ளார். ஆனால் டுவிட்டர் இந்தியா எந்த முழு அறிவிப்பும் இல்லாமல் அவரது கணக்கை மூடியுள்ளது. அதற்கு எதிராக அவர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.

தீபாவளி அன்று பட்டாசு குறித்து ஒரு பதிவை வெளியிட்டதாக ஸ்ரீகாந்த் கூறுகிறார். டுவிட்டர் அடிப்படை விதியை மேற்கோளிட்டு தங்கள் டுவிட்டர் கணக்கு மூடப்பட்டதாக கூறிய ஸ்ரீகாந்த், அந்த பதிவில் எந்தத் தவறும் இல்லை என்றும் அதை சரிபார்க்காமல் டுவிட்டர் இந்தியா தங்களது டுவிட்டர் கணக்கை மூடியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

ஸ்ரீகாந்தின் கூற்றுப்படி, இது இந்தியாவில், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது. எனவே டுவிட்டர் இந்தியா எம்டி மனீஷ் மகேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.