பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் கைது!!
பழங்குடியின நபர் மீது பாஜக எம்.எல்.ஏவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தின் குபாரி பஜாரில் பாஜக எம்.எல்.ஏ.வின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர், வாயில் சிகரெட்டை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்திருந்த மனநலம் சரியில்லாத பழங்குடியின நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழிக்கிறார்.
சர்ச்சைக்குரிய இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், பயத்தினால் புகார் அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் (என்எஸ்ஏ) போடப்படும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்ட முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், "சித்தி மாவட்டத்தின் வைரல் வீடியோ எனது கவனத்திற்கு வந்துள்ளது.
குற்றவாளியை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியவும் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய முன்னாள் எம்பி முதல்வர் கமல்நாத், "நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற கொடூரமான செயலுக்கு இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் பிரவேஷ் சுக்லா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சித்தியில் உள்ள உள்ளூர் போலீசார் அவருக்கு எதிராக ஐபிசி பிரிவு 294 மற்றும் 504 மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
ரூம் எடுக்க அதிக செலவா.? குறைந்த விலையில் ஹோட்டல் வசதி! IRCTC திட்டம் தெரியுமா உங்களுக்கு?