நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பொருளாதார மந்தநிலையில் இந்திய பொருளாதாரம் உள்ள நிலையில் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நேற்று தொடங்கியது. இதனையத்து வரும் நிதியாண்டின் பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய பட்ஜெட்டை இரண்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கமா ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு பற்றி மக்களிடம் எதிர்ப்பார்ப்பு இருக்கும். இந்த முறையும் அந்த எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இருக்காது என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில் துறைகள் முடங்கியுள்ள நிலையிலும், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையிலும் அதைச் சரிசெய்வதற்கான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தொழில் துறையில் தெரிவிக்கிறார்கள்.


உள் நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) தொடர்ந்து சரிந்துகொண்டே வரும் நிலையில், அதை சீராக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக ஜிடிபி வரும் நிதியாண்டில் 6 சதவீதமாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் கூறியுள்ள நிலையில், அதைத் தக்கவைக்கும் முயற்சிகள் பட்ஜெட்டில் வெளிப்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. 
மேலும் மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், வருவாயைப் பெருக்கும் வழிமுறைகள் பட்ஜெட்டில் இடம் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய திட்டங்கள் குறித்தும் அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா, பட்ஜெட் மூலம் இனிப்பு வழங்குவாரா அல்லது கசப்பு மருந்து வழகுவாரா என்பது மதியத்துக்குள்  தெரியவரும்.