Finance Bill gets presidential Pranab Mukherjee assent takes effect from today
ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பரிமாற்றம் செய்யத் தடை, வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் உள்ளிட்ட திருத்தங்கள் அடங்கிய நிதிமசோதா 2017-க்கு குடியரசுதலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, நிதிமசோதாவில் கொண்டு வரப்பட்ட 40 வகையான திருத்தங்கள் நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்தன. மேலும் வரித்திட்டங்கள் உள்ளடங்கிய 2017-18ம் ஆண்டு பொது பட்ஜெட்டும், நிதியாண்டின் முதல்நாளிலேயே நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பிப்ரவரி இறுதியில் தாக்கல்செய்யப்பட்டு வந்த பட்ஜெட் இந்த முறை பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட செலவினம், மானியங்கள், கோரிக்கைகள் அடங்கிய 2017-நிதிமசோதாவும் மார்ச் 30-ந்தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.அதற்கு அடுத்த நாளே குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அரசின் திட்டங்களுக்கு செலவு செய்யும் தொகை அந்தந்த மாநிலங்களுக்கு உடனுக்குடன் அளிக்க முடியும்.
இதற்கு முன் பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அது, மே மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கும். அதன்பின் திட்டங்களுக்கான செலவு தொகை மாநில அ ரசுகளுக்கு ஆகஸ்ட் இறுதிக்கு பின்பே ஒதுக்கமுடியும். அந்த காலதாமதம் இப்போது ஒழிக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டமிட்ட, திட்டமிடாத செலவுகள் நீக்கப்பட்டுள்ளது, ரெயில்வே பட்ஜெட் பொதுபட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா நிருபர்களிடம் நேற்று டெல்லியில் கூறுகையில், “ அசாம் செல்வதற்கு முன்பாகவே குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி 2017-நிதிமசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிட்டார். இதையடுத்து, நிதி மசோதா ஏப்ரல்1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி இனி ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக யாரும் ரொக்கப் பரிவர்த்தனை செய்ய முடியாது.மீறினால், அதே அளவு பணம் அபராதம் விதிக்கப்படும். பான்கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண் இனி கட்டாயமாகும். வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும் போதும் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். இந்த திருத்தம் ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
கம்பெனிச்சட்டம் 2013ல் கொண்டு வந்துள்ள திருத்தத்தின்படி, கட்சிகளுக்கு நன்கொடையே காசோலை, வரைவோலை, மின்னணு பரிமாற்றம் மூலமே நிறுவனங்கள் அளிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
