ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சருமான பரூக் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.

கர்ரா ராஜினாமா

ஜம்மு காஷ்மீரின் கந்தெர்பெல், ஸ்ரீநக மற்றும் புத்காம் மாவட்ட பகுதிகள் ஸ்ரீநக மக்களவை தொகுதிக்கு கீழ் வருகின்றன. இதன் எம்.பி.யாக பிடிபி கட்சியின் தாரிக் ஹமீது கர்ரா இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு நடைபெற்ற வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மக்களவை உறுப்பினர் என்கிற முறையில் அசம்பாவிதம் நடந்ததற்காக

கர்ரா ராஜினாமா செய்ததால் ஸ்ரீநக மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டது.

8 பேர் உயிரிழப்பு

இந்நிலையில் கடந்த 9-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போதும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. பாதுகாப்பு படையினர் மீது வன்முறையாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியால், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தார்கள்.

பதற்றம் காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது. மொத்தம் இங்கு 7.15 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. மேலும் 38 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 2 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது.

10 ஆயிரம் வாக்குகள்

இந்த நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் பரூக் அப்துல்லா 48 ஆயிரத்து 554 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிடிபி கட்சியின் நாசிர் கானுக்கு 37 ஆயிரத்து 779 வாக்குகளே கிடைத்தன. இதையடுத்து பரூக் அப்துல்லா 10 ஆயிரத்து 775 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கொண்டாட்டம் இல்லை

ஜம்மு காஷ்மீரில் பிடிபி (முப்தி கட்சி) – பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடைபெற்ற ஸ்ரீநகர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்திருப்பது, அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. தேர்தலில் நோட்டாவுக்கு 930 வாக்குகள் கிடைத்தன. பரூக் அப்துல்லா வெற்றி பெற்ற போதிலும், கடந்த 9ந்தேதி நடந்த வன்முறையில் 8 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால் தேசிய மாநாட்டு கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டத்தை தவிர்த்தனர்.