விதைகளைத் தூவினார் முதல்வர் மம்தா பானர்ஜி

சிங்கூர், அக். 21-
சிங்கூரில் டாடா நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பின், வேளாண் நடவடிக்கைகள் நேற்று தொடங்கின. முதல்வர் மம்தா பானர்ஜி கடுகு விதைகளைத் தூவி தொடங்கிவைத்தார்.

கார் தொழிற்சாலை

மேற்குவங்காள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்த போது, சிங்கூர் பகுதியில், டாடா நிறுவனம் நானோ கார் தொழிற்சாலை அமைக்க விரும்பியது. இதற்காக அப்பகுதி விவசாயிகளிடமிருந்து 997 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இதை எதிர்த்து கடந்த 2006ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்தது. இந்த திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பு

நீதிபதிகள் அருண் மிஸ்ரா, கோபால கவுடா ஆகியோர் அளித்த தீர்ப்பில், “ மக்களின் பயன்பாட்டுக்காக நிலம் கைப்பற்றப்படவில்லை, தனியார் நிறுவனத்துக்காக கைப்பற்றப்பட்டது தவறானது. அந்த நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். 12 வாரங்களுக்குள் 298 விவசாயிகளுக்கு 103 ஏக்கர் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

திரும்ப ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்கும் முயற்சிகள் துரிதகதியில் நடந்தன. இந்நிலையில், டாடா நிறுவனம் கைப்பற்றிய நிலத்தில் கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு அங்கு வேளாண் நடவடிக்கைகள் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் கடந்த சில நாட்களாக நடந்தன.

வேளாண் நடவடிக்கை

இந்தநிலையில், சிங்கூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி விதைகளைத் தூவி வேளாண் நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார். விவசாயிகளிடம் கலந்துரையாடி நிலத்தின் தன்மை, எந்தவகையான பயிர்களை பயிரிடலாம் என்பது குறித்து மம்தா கேட்டறிந்தார். மேலும், விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், இடுபொருட்களையும் அவர் வழங்கினார்.

முன்மாதிரி

அதன்பின் அவர் பேசுகையில், “ விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 997 ஏக்கர் நிலங்களில் இன்னும் 65 ஏக்கர் நிலம் மட்டுமே திரும்ப வழங்கப்படவில்லை. விரைவில் அனைத்து நிலங்களும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த உலகத்துக்கு சிங்கூர் ஓர் முன்மாதிரியாக திகழும் வகையில், இங்கு நினைவிடம் அமைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

இதற்கிடையே டாடா நிறுவனத்தின் கட்டிடங்கள் இன்னும் முழுமையாக இடிக்கப்படாதது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நானோ கார் தொழிற்சாலையின் பெரும்பாலான கட்டிடங்கள் இடித்து முடிக்கப்பட்டுவிட்டன. சிறுபகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. அதுவும் அடுத்த சில நாட்களில் தரைமட்டமாக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.