குஜராத்தில் இருந்து மும்பைக்கு ஜப்பான் நாட்டு உதவியுடன் செயல்படுத்த உள்ள புல்லட் ரயில் திட்டத்தை எதி்ர்த்து ஆயிரம் விவசாயிகள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

மும்பை-ஆகமதாபாத் இடையே ஜப்பான் நாட்டு உதவியுடன் புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது இது பிரதமரின் கனவுத்திட்டமாகப் பார்க்கப்படுகிறது. 508கி.மீ புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் நாட்டு அரசு ரூ.1.80 லட்சம் கோடி கடனாக அளிக்கிறது.

ஆனால், புல்லட் ரயில் திட்டத்துக்காக  தங்களின் விளைநிலங்களை கையகப்படுத்துவதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விவாசாயிகள் புகார் அளித்து ஏறக்குறைய ஆயிரம் விவசாயிகள் நேற்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.ஏற்கனவே புல்லட் ரயில் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து  5 விவசாயிகள் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இது கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புல்லட் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்ட பின் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சட்டத்தை குஜராத் அரசு வலுவிலக்கச் செய்துவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அரசு தங்களிடம் கலந்து பேசவில்லை, ஒரு மித்த கருத்தை ஏற்படுத்தவில்லை என்றும் விவசாயிகள் புகாரில் தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே விவசாயிகள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் இது தொடர்பாக மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. அதற்கு மத்திய அரசு சார்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.