Asianet News TamilAsianet News Tamil

பிரியா விடை கொடுத்து கிளம்பும் விவசாயிகள்.. விமானம் மூலம் மலர் தூவி வரவேற்பு

முன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஒரு வருடமாக டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராடிக் கொண்டிருந்த விவசாயிகள், தங்களது வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டே, சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். 
 

Farmers Protest in delhi
Author
India, First Published Dec 11, 2021, 9:02 PM IST

முன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஒரு வருடமாக டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராடிக் கொண்டிருந்த விவசாயிகள், தங்களது வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டே, சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். மேலும் டெல்லியில் போராட்டத்தை முடித்துக்கொண்டு டிராக்டர்களில் பஞ்சாப் திரும்பிய விவசாயிகளுக்கு விமானத்தில் இருந்து மலர் தூவி வரவேற்றுள்ளனர். ஹரியான - பஞ்சாப் எல்லையில் சம்பு என்னுமிடத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரின் ஏற்பாட்டின் படி  விவாசாயிகளுக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சிறிய பொம்மை டிராக்டரை சிறுவன் ஓட்டி சென்றான். 

Farmers Protest in delhi

ஒருபக்கம் கூடாரங்களை அகற்றிக் கொண்டே, இன்னொருபுறம் தங்களுடன் போராடிய பிற விவசாய நண்பர்களுக்கு பிரியாவிடை அளிப்பது என தங்களுடைய தலைநகர் முற்றுகையை விவசாயிகள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். காசிப்பூர், சிங்கு மற்றும் திகிரி ஆகிய எல்லைகளில் உள்ள ஆயிரக்கணக்கான கூடாரங்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

Farmers Protest in delhi

டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தங்களுடைய பொருட்களை விவசாயிகள் ஏற்றிச் செல்வதால் எல்லைப் பகுதிகள் பரபரப்பாக காணப்படுகின்றன. ஒரு வருடமாக விவசாயிகள் எல்லைகளில் உள்ள முகாம்களில் தங்கி இருந்ததால், அவர்கள் பயன்பாட்டுக்காக அங்கே வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கட்டில்கள், நாற்காலிகள், பெட்டிகள், படுக்கைகள், தலையணைகள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்கள் வீடு காலி செய்வது போல வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்லப்படுகின்றன.

Farmers Protest in delhi

கூடாரங்களை பிரித்து கட்டுமான பொருட்களை விவசாயிகள் டிராக்டர் வாகனங்களில் ஏற்றி தங்களுடைய கிராமங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். விவசாயிகளுக்கு உணவு தயாரிக்க சேமித்து வைக்கப்பட்டிருந்த கோதுமை மாவு, அரிசி, காய்கறிகள் மற்றும் பருப்பு போன்ற பொருட்களும் போராட்டக் களத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன.

சில இடங்களில் சீக்கிய மதத்தினரின் பஜனை, சில இடங்களில் பஞ்சாபில் பிரபலமான பாங்க்ரா நடனம், மற்றும் முகாமிட்டு இருந்த அத்தனை எல்லைப் பகுதிகளிலும் வெற்றி முழக்கங்கள் என பலவிதமான கொண்டாட்டங்களுடன் விவசாயிகளின் டெல்லி முற்றுகையை முடிவுக்கு வந்துள்ளது. டெல்லி சிங்கு எல்லையில் போராடிய விவசாயிகளுக்கு ஓராண்டாக இலவசமாக உணவு வழங்கிய கோல்டன் ஹைட் உணவகம் போராட்ட காலத்தில் மூடப்பட்டிருந்தது. போராட்டம் முடிவடைந்த நிலையில் உழவர்கள் தங்கள் குடும்பம் என்று கூறும் ஹோட்டல் உரிமையாளர் அதனை மீண்டும் திறப்பதற்கான பணியில் ஈடுப்பட்டுள்ளார்.

Farmers Protest in delhi

மேளதாளத்துடன் விவசாயிகள் தங்களுடைய கிராமங்களுக்கு திரும்பும்போது, அவர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மாலைகள் சூட்டியும் தடபுடலாக மரியாதை செய்து வருகின்றனர். வரலாறு காணாத வெற்றியை கொண்டாடுவோம் என விவசாயிகள் தங்கள் உற்றார், உறவினரை சந்திக்க கிராமங்களுக்கு திரும்பிக் கொண்டுள்ளனர். காசிப்பூர் எல்லையில் உள்ள கூடாரங்கள் அடுத்த சில நாட்களில் முழுவதுமாக அகற்றப்படும் எனவும் அனைத்து விவசாயிகளும் அந்தப் பகுதியிலிருந்து 15ஆம் தேதிக்குள் வெளியேறி விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Farmers Protest in delhi

சிங்கு எல்லையில் மிகவும் அதிக எண்ணிக்கையில் கூடாரங்கள் உள்ளதால், அவற்றை அகற்ற ஒருவாரம் வரை ஆகலாம் என கருதப்படுகிறது. சிங்கு எல்லையில் பல கிலோ மீட்டர் தூரம் வரை கூடாரங்கள் அமைத்து விவசாயிகள் தங்கியிருந்தனர். திகிரி எல்லையில் கூடாரங்களில் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அங்குள்ள விவசாயிகள் ஒருசில நாட்களில் வெளியேறி விடுவார்கள் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios