farmers loan withdraw in karnataka

கர்நாடக மாநிலத்தில் உள்ள 22 லட்சத்து 27 ஆயிரம் விவசாயிகளின் ரூ.8 ஆயிரத்து 165 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் சித்தராமையா இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

ரூ. 50 ஆயிரம் வரை பயிர்கடன் பெற்றுள்ள ஒவ்வொரு விவசாயிக்கு மட்டுமே இந்த தள்ளுபடி அறிவிப்பு பொருந்தும்.

இதையடுத்து பயிர்கடன் தள்ளுபடி செய்த 4-வது மாநிலமாக கர்நாடகம் ஆகிறது.

விவசாயம் பொய்த்தது

நாடுமுழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சியால் பல மாநிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டது. கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் நஷ்டமடைந்து தற்கொலை செய்யும் நிகழ்வுகளும் நடந்தன.

3 மாநிலங்கள் ‘தள்ளுபடி’

இதையடுத்து, உத்தரப்பிரதேசத்தில் பொறுப்பேற்ற முதல்வர் ஆதித்யநாத்தலைமையிலான பா.ஜனதா அரசு, முதன் முதலில் விவசாயிகளின் ரூ. 36 ஆயிரம் கோடி பயிர்கடனை தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து மஹராஷ்டிரா அரசும், கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசும் விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்தன.

4-வது மாநிலம்

இந்நிலையில், கர்நாடக மாநிலத்திலும் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் வறட்சியால், அங்குள்ள விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் சித்தராமையா சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை இன்று வௌியிட்டார். சட்டப்பேரவையில் முதல்வர் சித்தாரமையா பேசியதாவது-

நலன் காக்கப்படும்

கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் துன்பத்தில் சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் பெற்ற பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு எங்கள் அரசு நிச்சயம் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும். இதனால் அரசின் நிதிநிலையில் பாதிப்பு ஏற்பட்டால் கூட விவசாயிகள் நலன் காக்கப்படும்.

ரூ.8,165 கோடி

மாநிலத்தில் உள்ள 22 லட்சத்து 27 ஆயிரத்து 506 விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்று இருந்த ரூ. 8 ஆயிரத்து 165 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் பெற்ற குறுகியகால அல்லது பயிர்கடன் ரூ. 50 ஆயிரம் வரை நேற்றுமுன்தினம் வரை நிலுவையில் இருந்தால் கூட அந்த கடன் தள்ளுபடி செய்யப்படும்.

 கோரிக்கை

ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் பயிர்கடன் கூட்டுறவு வங்கிகளில் ரூ.10 ஆயிரத்து 736 கோடி இருந்தது. அதில் ரூ.8 ஆயிரத்து 165 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கிராம வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற பயிர்கடனை தள்ளுபடி செய்ய மத்தியஅரசு முன் வர வேண்டும்.

20சதவீதம்

கூட்டுறவு வங்கிகளில் இருந்து விவசாயிகள் பெற்ற கடன் என்பது 20சதவீதம் தான். ஆனால், 80 சதவீதம்கடன் கிராம வங்கிகளிலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும்தான் கடன் பெற்றுள்ளனர். அதை கருத்தில் கொண்டு மத்தியஅரசுதள்ளுபடி அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.