தீவிரமடையும் விவசாயிகளின் முற்றுகை போராட்டம்: எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், டெல்லி முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கியுள்ளனர்

Farmers delhi chalo protest march resume security beefed up in borders smp

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், குறைந்த பட்ச ஆதரவு விலை உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரில் விவசாயிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் டெல்லியில் தங்கி விவசாயிகள் போராடினார்கள். அவர்களது எதிர்ப்பினால் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்ததையடுத்து, விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

ஆனால், இப்போது மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 13ஆம் தேதி டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் தங்களது ஊர்களில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டனர். தலைநகர் டெல்லியை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், டெல்லியில் எல்லைகளில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், பஞ்சாப், ஹரியாணா மாநில எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மத்திய அரசுடன் தங்களது கோரிக்கைகள் குறித்து விவசாய சங்கங்கள் 4ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தின. அதற்காக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. ஏற்கனவே, கடந்த 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 3 கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படாததால், விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுத்த நிலையில், 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், அதிலும் உடன்பாடு எட்டப்பட்டவில்லை.

எனவே, தங்களது 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்பட பல மாநில விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால், எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில எல்லைகளில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர். ஆனால், அவற்றை தகர்த்தெறிய ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விவசாயிகள் புறப்பட்டனர்.

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? கமல்ஹாசன் தகவல்!

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். ஹரியாணா எல்லையில் விவசாயிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், விவசாயிகள் போராட்டம் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், அதனை முறியடிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டவும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசு  சட்டத்தை இயற்றினால் போராட்டம் முடிவுக்கு வரும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை நடத்த அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். “நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் எம்எஸ்பி கோரிக்கை, பயிர் பன்முகப்படுத்தல், விவசாயிகள் மீதான எஃப்ஐஆர் போன்ற அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. மீண்டும் விவசாயத் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறேன்.” என மத்திய விவசாயம், விவசாயிகள் நலன் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios