வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டிற்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், டிச.11 ஆம் தேதியுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். 

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டிற்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், டிச.11 ஆம் தேதியுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக டெல்லி எல்லையில் உள்ள சிங்கு, திக்ரி போன்ற எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், உ.பி, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றனர். மத்திய அரசு பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. மத்திய அரசு வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர தயாராக இருந்தது. ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என விவசாயிகள் கண்டிப்புடன் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். இந்தப் போராட்டக் களத்தில் பல்வேறு காரணங்களால் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். மேலும் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின நாளில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர்கள் பேரணி பெரும் வன்முறையில் முடிவடைந்தது.

டெல்லி செங்கோட்டையில் பஞ்சாப் பிரிவினைவாதிகள் கொடி ஏற்றப்பட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனைத் தொடர்ந்து உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இத்தனை இன்னல்களுக்கும் இடையே விவசாயிகளின் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றது. இந்நிலையில் பிரதமர் மோடி அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகவும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். பின்னர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றபப்ட்டது. இம்மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இருந்தபோதும் குறைந்த பட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) குறித்து உறுதியளிக்க வேண்டும். விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். அப்போதுதான் போராட்டத்தை கைவிடுவோம் எனத் தெரிவித்தனர். இந்நிலையில், குறைந்தபட்ச ஆதாரவிலை கோரிக்கை தொடர்பாக ஆராய குழு அமைக்கப்படும் என்றும், அதில் சம்யுக்த கிசான் மோர்ச்சா பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும் மத்திய அரசு உறுதி அளித்தது. மேலும் விவசாயிகளை உள்ளடக்கிய குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இது தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆவணங்களும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக நீடித்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஆலோசனைகளை விவசாயிகள் நடத்தினர். இந்த நிலையில் இன்று டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது போராட்டத்தை திரும்பப் பெற்றனர். முன்னதாக எல்லைகளில் அமைத்திருந்த தங்களது கூடாரங்களை அவர்கள் கலைத்தனர். வரும் 11 ஆம் தேதி டெல்லி சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் இருந்து விவசாயிகள் வெளியேறுகிறார்கள். அதே நேரத்தில் மத்திய அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.