சென்னை அருகே வங்கக்கடலில் கடந்த மாதம் 25-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது புயலாக மாறியது. அந்தப் புயலுக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட்டது. ஃபானி புயல் தமிழ்நாட்டை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்மூலம் சென்னை மற்றும் அதையொட்டிய புறநகர்ப்பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் ஃபானி புயல் பாதை மாறியது. 

அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  இன்று காலை 11 மணியளவில் ஒடிசா மாநிலம் பூரி அருகே கோபால்பூர்-சந்த்பாலிக்கு இடையே ‘பானி’ புயல் கரையை கடக்கிறது.  புயலின் கண் பகுதி என்று சொல்லப்படும் மையப்பகுதி 2 மணியளவில் கரையை தாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தப் புயல் காரணமாக கடலோர ஆந்திர மாநிலத்தில் விசாகபட்டினம், விஜயநகரம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருகிறது. ஃபானி புயல் ஒடிசாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 200 கி.மீ. வேகத்துக்கு சூறைக்காற்று வீசும். இடைவிடாது மழை பெய்யும் என வானிலை வட்டாரங்கள் கூறுகின்றன. இது ஆந்திரா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

புயல் ஆபத்து உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் நடவடிக்கையை ஒடிசா மாநில அரசு நேற்று காலை தொடங்கியது. அவர்கள் வீடுகள் போன்ற வசதிகளுடன்கூடிய பல்நோக்கு தங்கும் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 11 லட்சம் பேர் இப்படி வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, பல்நோக்கு தங்கும் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


நள்ளிரவு முதல் புவனேஷ்வரில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா விமான நிலையம்  இன்று இரவு 9.30 மணி முதல் சனிக்கிழமை இரவு 6 மணி வரை மூடப்படுகிறது. கடற்கரை ஒட்டிய பகுதிகள் வழியாக செல்லக்கூடிய 200 க்கும் மேற்பட்ட ரயில்களை ரயில்வே ரத்து செய்துள்ளது. மேற்கு வங்காளத்தை ஒட்டியபடி வங்காளதேசத்தை நோக்கி ஃபானி புயல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒடிசாவில் 1999 ஆம் ஆண்டு தாக்கிய சூப்பர் புயலுக்கு பிறகு, இவ்வளவு தீவிர புயல் உருவாகியிருப்பது இதுதான் முதல் முறையாகும். சூப்பர் புயல் தாக்கியதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, ஒடிசாவில் கடும் சேதங்களை ஏற்படுத்தியது. ஏப்ரல் மாதத்தில் புயல் உருவாகியிருப்பது 43 ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாகும்.