பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் கேட்டு பெற்ற கல்லூரி மாணவி ஒரே நாளில் பிரபலமாகி விட்டார். அத்துடன் கல்லூரி மாணவியை திருமணத்துக்கு பெண் கேட்டு பலர் அணுகி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூரில் கடந்த 16-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். இந்தக் கூட்டத்தில் பந்தல் சரிந்து விழுந்ததில் பன்குரா மாவட்டம் சல்ஜேரா என்ற கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி ரீட்டா மூடி என்பவர் உட்பட சிலர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்களை நேரில் சென்று பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அப்போது, மோடியிடம் ‘ஆட்டோகிராப்’ வேண்டும் என்று ரீட்டா கோரினார். அவர் குணமாக வாழ்த்து தெரிவித்து மோடியும் கையெழுத்திட்டுக் கொடுத்தார். மோடியுடன் ரீட்டா இருக்கும் படமும் சமூகவலைதளம் மற்றும் செய்தியும் பத்திரிகைகளில் வெளியானது. மருத்துவமனையிலும் இருந்து வீடு திரும்பினார். பின்னர்  மோடியின் கையெழுத்தைப் பார்க்க பொதுமக்கள் பலர் குவிந்து வருவதாக ரீட்டா தெரிவித்துள்ளார்.

ரீட்டாவின் தாய் சந்தியா கூறுகையில், கடந்த 10 நாட்களில் ரீட்டாவை பெண் கேட்டு ஜார்க்கண்டில் சொந்த தொழில் செய்பவரின் குடும்பத்தாரும், பன்குராவில் இருந்து விவசாயத்தை கவனிப்பவரின் குடும்பத்தாரும் அணுகியுள்ளனர். வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று கூறுகின்றனர். மேலும் பலரும் அணுகிவருகின்றனர். ஆனால், ரீ்ட்டாவும் அவரது சகோதரி அனிதாவும் படிக்க விரும்புகின்றனர். படிப்பு தான் முக்கியம்' என்று ரீடா கூறிவிட்டார்.