fake news about train curd

ரெயில்வேதுறையின் சமையல் பிரிவு, பொருட்களின் அதிகபட்ச விலையைக் காட்டிலும் பல மடங்கு பணம் கொடுத்துதான் வாங்கி சமையல் செய்வதாகவும், ஊழல் நடப்பதாகவும் நேற்று நாளேடுகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்டவற்றில் செய்திகள் வெளியானது.

 ஆனால், அதன் உண்மைத் தன்மை குறித்து இப்போது கேள்வி எழுந்துள்ளது, அது தவறானது ஒரு தரப்பில் கூறப்பட்டு, ஆதற்கான ஆதரமும் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஜெய் போஸ் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டபோது அவருக்கு ரெயில்வே துறை சார்பில் சமையல் பொருட்கள் எந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்த பட்டியல் கொடுக்கப்பட்டது.

அதில் ரூ.25 மதிப்புள்ள 100 கிராம் தயிர், 972ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருந்தது.

ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் ரூ. ஆயிரத்து 241க்கும், 58 லிட்டர் எண்ணெய் ரூ.72 ஆயிரத்து 034-க்கு வாங்கப்பட்டுள்ளது, டாட்டா உப்பு 150 பாக்கெட்டுகளை ரூ.2,670க்கும் (அதாவது1 பாக்கெட்டின் விலை ரூ.49, உண்மையான விலை ரூ.15) வாங்கியுள்ளனர்.அதேபோல, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் ஒரு பாட்டிலுக்கு ரூ.59 என்ற வீதத்தில் வாங்கப்பட்டுள்ளன.

இந்த செய்தி பிரபல ஆங்கில நாளேடு உள்ளிட்ட அனைத்து தமிழ்நாளேடுகளிலும், செய்திச் சேனல்களிலும் ஒளிபரப்பானது. ஆனால், இதில் உண்மையில்லை சரியாக ஆய்வு செய்யாமல் செய்திகள் வெளியாகியுள்ளன, உண்மையான பில்லின் நகலையும் பேஸ்புக்கில் வெளியிட்டு ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து அந்த நபர் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது-

100 கிராம் தயிர் ரூ. 972க்கு வாங்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், ரெயில்வே துறை வாங்கும் தயிர் டப்பாக்கள் அடங்கிய ஒரு பெட்டியில் மொத்தம் 8 அடுக்குகள் இருக்கும். ஒவ்வொரு அடுக்கிலும் 100 கிராம் அடங்கிய தயிர் டப்பாக்கள் 108 எண்ணிக்கையில் இருக்கும். ஒவ்வொரு 100 கிராம் தயிரின் விலை ரூ.8.58 காசுகள். ஆக மொத்தம் ஒரு அடுக்கில் இருக்கும் 108 தயிர் டப்பாக்கள் விலை மொத்தம் ரூ.926. இதேபோல 8 அடுக்குகளிலும் உள்ள தயிரின் விலை ரூ.926X8= ரூ. 7,413.27 காசுகள். வாட் வரி சேர்த்து ரூ.7,783க்கு வாங்கப்பட்டுள்ளது. இதைச் சரியாகப் பார்க்காமல் ஊடகங்கள் செய்தியை திரித்து வெளியிட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். அதற்கான மும்பை சி.எஸ்.டி. இருக்கும் ரெயில்வே சமையல் அறைக்காக வாங்கப்பட்ட அந்த பில்லின் ஒருபிரதியையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஆதலால், ரெயில்வே துறையில் சமையல் பொருட்களை அதிகவிலைக்கு அதிகாரிகள் வாங்கி ஊழல் செய்துவிட்டார்கள் என்ற செய்தி எந்த அளவுக்கு நம்பகமானது என்பதும் இப்போது கேள்விக்குரியதாக மாறியுள்ளது.