உணவு பொருட்கள், குடிநீர் என அனைத்திலும் கலப்படமாகியுள்ள நிலையில், தற்போது ரத்தத்திலும் கலப்படும் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த ஆறு மாதங்களாக ரத்த வங்கி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இதனை முகமது நசீம் என்பவர் நடத்தி வந்துள்ளார். இவருக்கு உதவியாக ராகவேந்திர சிங் என்ற லேப் டெக்னீசியன் இருந்து வந்துள்ளார். 

இவர்கள், போதைக்கு அடிமையானவர்கள், பணம் தேவைப்படும் ஏழை மக்களைத் தொடர்பு கொண்டு, ரத்தம் பெற்றுள்ளனர். ஒரு யூனிட் ரத்தத்துக்கு 500 ரூபாய் பணமும் கொடுத்து வந்துள்ளனர். எச்.ஐ.வி. சோதனை உள்ளிட்ட எதுவும் செய்யாமலேயே அவர்களிடம் ரத்தம் பெற்றுள்ளனர். அப்படி அவர்களிடம் பெற்ற ரத்தத்துடன், குளுகோஸை சேர்த்து இரண்டு யூனிட் ரத்தமாக மாற்றியுள்ளனர். இதனை யூனிட் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை விற்று வந்துள்ளனர். 

அரசு அங்கீகாரம், போலியான முத்திரை ஆகியவற்றைக் கொண்டு அசல் ரத்த வங்கி உறையைப் போன்றே தயார் செய்து விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில்தான், இவர்களிடம் பெற்ற ரத்தம், அதிக தண்ணீருடன் இருப்பதைக் கண்டுபிடித்த மருத்துவமனை, இதுபற்றி விசாரித்தது. உண்மையைக் கண்டுபிடித்த மருத்துவமனை போலீசில் புகார் அளித்தது. இதையடுத்து, போலி ரத்த வங்கி நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். உண்ணும் உணவில் இருந்து எல்லாவற்றிலும் கலப்படம் பாய்ந்துள்ள நிலையில், உயிர் காக்கும் ரத்தத்திலும் கலப்படம் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.