போலியாக வங்கி கிளை திறந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசம், வாரணாசியில் நடந்துள்ளது.

அபாக் அகமது என்பவர், வாரணாசியில் பல்லியா மாவட்டத்தில் உள்ள பதான் நகரில் முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டை சமீபத்தில் வாடகைக்கு எடுத்துள்ளார்.

இந்த வாடகை வீட்டில், அபாக் அகமது கர்நாடக வங்கியின் கிளையை திறந்துள்ளார். தனது பெயர் வினோத்குமார் கம்பாளி என்றும், தான்தான் இந்த வங்கிக்கு மானேஜர் என்றும் அப்பகுதியில் கூறியுள்ளார். 

இதற்காக போலியாக கர்நாடக வங்கியின் ஐடி கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை அபாக் அகமது உருவாக்கி உள்ளார். மேலும், அந்த வங்கியில் கணினி, லேப்டாப், கர்நாடக வங்கிக்கான காசோலைகள், சலான்கள் என அனைத்து ஆவணங்களும் இருந்தது.

கர்நாடக வங்கியின் புதிய கிளை ஒன்று பல்லியா மாவட்டத்தில் திறக்கப்பட்டது குறித்து வாரணாசியில் உள்ள கர்நாடக வங்கியின் நிர்வாக பொது மேலாளர் கிதந்திரா கிருஷ்ணாவுக்கு தகவல் கிடைத்தது. இதனைக் கேட்ட கிதந்திரா அதிர்ச்சி அடைந்தார். பல்லியா மாவட்டத்தில் திறக்கப்பட்ட கர்நாடக வங்கியின் கிளை போலியானது என்று போலீசுக்கு புகார் கொடுத்தார்.

கிதந்திராவின் புகாரை அடுத்து, போலீசாரும் வங்கி அதிகாரிகளும் உடனடியாக பதான் நகருக்கு விரைந்தனர். அங்கு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த போலி வங்கிக்குள் அவர்கள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர்.

வங்கி கிளை போலியானது என்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அபாக் அகமதுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த போலி ஐடி கார்டுகளை பறிமுதல் செய்தனர். கணினி, லேப்டாப், போலி ஆவணங்கள் உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 15 பேரிடம் வைப்புக்கணக்கு என்ற பெயரில் வாங்கிய ரூ.1.35 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.